பெரியார் சொன்ன புதுமொழிகள்
தூத்துக்குடி பாலு
பெண்களுக்கு நகைகள் ஏன்?
பெண்களுக்குக் காதுகளிலும்,மூக்குகளிலும் ஓட்டைகள் போட்டதற்கும் நகைகள் போட்டு பாரத்தை ஏற்றினதற்கும் காரணம், ஆண்கள் திட்டினால் பொறுத்துக் கொள்ளவும், அடிக்கப் போனால் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு முதுகைக் காட்டவும் வசமாய் இருக்கட்டும் என்றே கருதி, மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுவது போல் பெண்களுக்குப் பாரத்தை (நகைகளைத்) தொங்க வைத்திருக்கிறார்களே தவிர வேறென்ன?
கல்யாணம் என்பது...
கல்யாணம் என்பது ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பம் நுகரவும், வாழ்க்கையில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும், ஆயாசம் தீர்க்கவுமே ஆணுக்கு ஓர் பெண்ணும் பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியதிருக்கிறது என்பதை பெரும்பாலோர் சிந்திப்பதில்லை.
ஆண்களின் அடிமைகள்
விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தையாகும். ஏனெனில், விபச்சாரத் தோஷம் வழக்கில் பெண்களுக்குத்தான் உண்டே ஒழிய ஆண்களுக்கு இல்லை. எனவே விபச்சாரம் என்கிற வார்த்தையின் தத்துவம் பெண்களை ஆண்களின் அடிமைகள் என்றும் விலைக்கு வாங்கவும் வாடகைக்கு விடவும் கூடிய பொருள்கள் என்றும் கருதுவதேயாகும்.
விடுதலை எப்போது வரும்?
பெண்கள் தங்கள் ஜீவ சுபாவத்துக்காக தாங்களே முயற்சியெடுத்துக் கட்டுப்பாடுகள் என்ற விலங்குகளைத் தகர்த்தெறிய முற்பட்டாலொழிய, தங்களை வாசனைத் திரவியங்கள் போலவும், உடையணிகள் போலவும் மதித்து அனுபவித்துக் கொண்டு வரும் ஆண்களாலும், எப்படிப்பட்ட சம தர்ம ஆட்சியாலும் பொதுவுடமைக்காரருடைய ஆட்சியாலும் விடுதலை ஏற்படாது.
எது ஒழிக்கப்பட வேண்டும்?
நோய்க்கு மருந்து சாப்பிட்டால் தற்காலச் சாந்திதான் கிடைக்கும். சுகாதார முறைப்படி நடந்தால்தான் நிரந்தரப் பலன் ஏற்படும். திராவிடர் கழகம் சுகாதார இலாகாவே ஒழிய, வைத்திய இலாகா அல்ல. ஒரு சிலர் வாழ, நிலைக்க அதிகாரத்திற்கு வர ஏதுவாயுள்ள கோயில், கடவுள், மதம், புராணம், சாஸ்திரம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.