இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸை விட வேகமாக சாதி, மதப் பேதமின்றி குடிசை வாழ் குப்புசாமியிலிருந்து மாடி வீட்டு மல்கோத்ரா வரை பரவி வரும் ஒரு கொடிய நோய் மூடநம்பிக்கைதான். இதற்குக் காரணம் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பதுதான்.
மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும் கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதனமாக்கி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடி போல் மானவாரியாக முளைத்து வருபவர்கள்தான் இந்த போலிச் சாமியார்களும் சோதிடர்களும்.
‘பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை.’ என்கிறார்கள். ஏன்? நாய், பசு போன்று அதுவும் ஒரு பிராணிதானே. அது மட்டும் என்ன மனிதனுக்கு கேடு விளைய வேண்டும் என்று விரதம் இருந்து வேள்வியா நடத்துகிறது! இந்தப் பூனைக் குறுக்கே வந்தால்…. இதற்கு ஒரு கதையே உண்டு. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
முன்பெல்லாம் குருகுல கல்விதான் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாணவர்கள் அந்த குருகுலத்தில் தங்கியிருந்து படித்தார்கள். அப்படி ஒரு குருகுலத்தில் குரு மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். அவர்கள் வளர்த்த பூனை ஒன்று ஒருநாள் குருவுக்கும் மாணவர்களுக்கும் நடுவிலே நடந்து சென்றது. இதனால் சில நிமிடங்கள் மாணவர்களின் கவனம் குரு நடத்தும் பாடத்தில் செல்லாமல் பூனையிடம் சென்றது. இதே போல் மறுநாளும் பாடம் நடத்தும் வேளையில் பூனை குறுக்கே நடக்க மாணவர்களின் கவனம் சிதறியது.
அடுத்த நாள் அதே நேரத்தில் மாணவர்கள் பூனையின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பார்த்தார் குரு "இந்த பூனையால் பாடம் நடத்துவது தடைபடுகிறதே. இனிமேல் இந்தப் பூனை இப்படிக் குறுக்கே வந்தால் காரியம் கெட்டு விடும். மாணவர்கள் ஒழுங்காகப் பாடத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். இதற்கு ஒரு முடிவு செய்யவேண்டும்’"என்று நினைத்தார்.
மறுநாளிலிருந்து பாடம் நடத்தும் வேளைகளில் என்று அந்தப் பூனையைப் பிடித்து கட்டிப்போட்டு விட்டார்.
இந்தப் பூனை குறுக்கே வந்த கதையைத்தான் இப்படி திரியாக்கிப் பற்ற வைத்து பந்தமாக எறியவிட்டு கடைசியில் சகுனமாக்கி விட்டார்கள்.
திரைப் படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் வன்முறையை வளர்ப்பதற்கு எப்படி வழி செய்கிறதோ, அதே போல் மூட நம்பிக்கையையும் உரம் போடாமல் மக்கள் மனதிலே வளர்த்து விடுகிறார்கள்.
ஒரு பிரபல தொலைக்காட்சியில், பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலத் தொடரில் பல வாரங்களுக்கும் மேலாக ஒரு பச்சிளம் குழந்தையை மையப்படுத்தி ஒரு காட்சியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உடுக்கை அடித்து வெற்றிலையில் மை போட்டுப் பார்த்து பச்சிளங் குழந்தையைப் பலி கொடுத்தால் புதையல் கிடைக்குமாம்.
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?
பழைய மாயாஜாலக் கதைகளில் மனித உயிரைப் பலி கொடுத்து புதையலை எடுக்க முயற்சிப்பதைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் எந்தக் கதையிலாவது எந்த மந்திரவாதியாவது புதையலை எடுத்து அதன் பின்பு மகிழ்ச்சியாகப் பல நூறு வருடங்கள் வாழ்ந்தான் என்று படித்திருக்கிறோமா? இல்லையே...
மண்ணெல்லாம் அளந்து முடித்து விண்ணிற்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் இப்படியொரு உடுக்கை ஜோசியம் அவசியம்தானா?. சற்று யோசித்துப் பாருங்கள்... இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள் இனிமேலாவது சிந்தித்துப் பார்ப்பார்களா?
இப்போதெல்லாம் இங்கு நான்கு தெருவுக்கு ஒரு சோதிடரும், நாலு ஊருக்கு ஒரு சாமியாரும் வந்துவிட்டார்கள். சிலர் தும்மல் வந்தால்கூட மஞ்சள் பையில் சாதகத்தைத் திணித்துக் கொண்டு சோதிடர் வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தி விடுகிறார்கள். சிலர் காலையில் எழும்பும் போது மனைவி முகத்தில் விழிப்பதா? வேலைக்காரி முகத்தில் விழிப்பதா? என்று தனது ஆஸ்தான சோதிடரிம் ஆலோசனைக் கேட்டுத்தான் கண்ணை விழிக்கிறார்கள். உண்மையில் இவர்கள் தங்கள் மூடநம்பிக்கையிலிருந்து எப்போது விழித்துக் கொள்ளப் போகிறார்களோ?
கற்பூரச் சாமியார், சாம்பிராணிச் சாமியார், ஊதுவத்திச் சாமியார் என்று ஏகப்பட்ட சாமியார்கள் இருக்கிறார்கள். இப்பொழுது பீர் சாமியார், பிராந்திச் சாமியார், சுருட்டுச் சாமியார் என்று மதுபானப் பெயர்களைக் கொண்டவர்கள் காவி கட்டி நெற்றி நிறைய நீரு பூசி ஏமாற்றத் துணிந்து விட்டார்கள்.
இந்தச் சின்னச்சின்ன சாமியார்கள் தவிர , தங்களையே கடவுளாகக் காட்டிக் கொள்ளும் மிகப் பெரிய சாமியார்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சாமரம் வீசிப் பாத பூஜை செய்து, பல இலக்க பணத்தை அள்ளி வழங்கி பாதுகாப்பு அளிக்கும் சில பணக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தக் கடவுளின் அவதாரங்களுக்கு, அவர்களுக்குள்ள மாபெரும் சக்தியால் நாட்டிற்கு வந்த பேரழிவுகளான சுனாமிகளையும் சூறாவளிகளையும் கண்டு சொல்ல முடியவில்லையே?. அந்தப் பேரழிவுகளை நிறுத்த முடியவில்லையே?! நாட்டையே அச்சுறுத்தி வரும் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லையே?. இவர்களால் எதுவும் முடியாது. காரணம் சாமியார் என்ற முகமூடி அணிந்து சமுதாயத்தை ஏமாற்றும் இவர்களில் பலரும் சமூக விரோதிகள்தானே தவிர சமூகப் பாதுகாவலர்கள் இல்லை.
செருப்புத் தேய நடையாய் நடந்து நம்மிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமரும் அரசியல்வாதிகள் கூட இது போன்றவர்களிடம் ஆசி பெற்று அரசியல் நடத்தும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்த அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்யும் சேவைகளை விட இது போன்ற சாமியார்களுக்குச் செய்யும் சேவைகள்தான் அதிகம்.
உழைத்துக் கிடைக்கும் பலனைவிட குறுக்கு வழியில் கிடைக்கும் பலனையே அதிகம் எதிர்பார்க்கும் மனிதர்கள் அதிகமாகி வருவதால் மூட நம்பிக்கையான இந்த ஏமாற்று வேலைகளும் தங்கு தடையில்லாமல் எல்லா இடங்களிலும் பயணம் செய்து கொண்டிருக்கிறது. மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
மனிதர்களை மனிதர்களே ஏமாற்றும் இந்த அவலம் மாற வேண்டும். இதற்கு முதலில் மனிதனின் பேராசைகள் அகல வேண்டும்.