தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய இருபது நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘கணினி மற்றும் இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனி நாடார் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பாடத்திட்ட வல்லுநர் குழுவில் தொழில்நுட்ப வல்லுநராக (2024 - 2027) நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறார்.
தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வரும் இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ‘சிந்தனைச் சிகரம் விருது’, வடசென்னைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய ‘முத்தமிழறிஞர் கலைஞர் விருது’, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய ‘படைப்பாக்க மேன்மை விருது’, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் வழங்கிய ‘இணையத்தேனீ விருது’, வடசென்னைத் தமிழ் இளைஞர் கழகம் வழங்கிய ‘அதியமான் விருது’, தேனி வையைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய ‘கணினித் தமிழ் விருது’, முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் வழங்கிய ‘கணினித் தமிழ்ச் சாதனையாளர் விருது’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, சிறந்த நூல்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட நூல்களுள் கணினியியல் பிரிவில் சிறந்த நூலுக்கான (தமிழ் விக்கிப்பீடியா நூல்) ரூபாய் 30 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை அப்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வழங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான ரூபாய் 20 ஆயிரம் பரிசுத்தொகையுடனான “தூய தமிழ்ப் பற்றாளர் விருது”, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் வழங்கப் பெற்று வரும் ரூபாய் இரண்டு லட்சம் விருதுத் தொகை, தமிழ்நாடு அரசு இலச்சினையுடனான ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கிய தகுதியுரையுடனான 2023 ஆம் ஆண்டிற்கான “சிங்காரவேலர் விருது” ஆகியவைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.