சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)
முனைவர் சி. சேதுராமன்
புதுக்கோட்டையிலுள்ள மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி) யில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் முனைவர் சி. சேதுராமன், தமிழ்ப்பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.A), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர். இவரது ஆய்வுக் கட்டுரைகள் பன்னாட்டுத் தர எண்ணுடன் (ISBN) கூடிய பன்னாடு மற்றும் தேசியக் கருத்தரங்கக் கட்டுரைகளாக 50 கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. இவை தவிர, தினமணி நாளிதழ், முத்துக்கமலம், வல்லமை, திண்ணை உள்ளிட்ட இணைய இதழ்களிலும் இவர் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது நெறியாளுகையில் 4 பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். 8 பேர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 80 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். இருவர் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்விப் பாடத்திட்ட வடிவமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பெறும் அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கில் அரசு அலுவலர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சியினை ஆறு ஆண்டுகள் வரை அளித்திருக்கிறார். மாநில அளவில் தமிழாசிரியர்களுக்குத் மொழிப்பாடம் கற்பித்தல் குறித்த பயிலரங்கில், செய்யுள், உரைநடை, இலக்கணம் கற்பித்தல் குறித்துப் பயிற்சியளித்திருக்கிறார். புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி) பாடத்திட்டக்குழுத் தலைவராக இருந்து வருகிறார். புதுக்கோட்டை, அரசு மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர், மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி ஆகியவற்றில் பாடத்திட்டக்குழு பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
கலித்தொகையில் தொன்மக்கூறுகள், தமிழ்ச்செம்மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, காலமாற்றம் (சிறுகதைகள்), போட்டித் தேர்வு வினா விடைகள், அகதிகள் சிறுகதைகள், கண்ணீரும் தண்ணீரும் (சிறுகதைகள்), நந்திக் கலம்பகம் உரை, காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி (உரை), அபிராமி அந்தாதி (உரை), பழமொழிகளில் வாழ்வியல் தத்துவங்கள் உள்ளிட்ட 34 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சொற்பொழிவுகள் போன்றவற்றில் கலந்து கொண்டிருக்கிறார். இவரது தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூல், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் புதுக்கோட்டை, அரசு மகளிர் கல்லூரியிலும், கண்ணீரும் தண்ணீரும் (சிறுகதைகள்) எனும் நூல், புதுக்கோட்டை, அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரியிலும், அகதிகள் சிறுகதைகள் எனும் நூல் மதுரை யாதவர் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை, அரசு மகளிர் கல்லூரியிலும் பாடமாக வைக்கப் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் மாநில அளவில் நடத்திய கட்டுரைப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறார். கரூர், திருக்குறள் பேரவையில் சிறந்த கவிஞர் என்று பாராட்டப் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த நூலாசிரியர் (2012) பரிசினைப் பெற்றிருக்கிறார்.
முனைவர் சி. சேதுராமன் சுய விவரக் குறிப்பு (பிடிஎப் கோப்பு)
* * * * *
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|