சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)

கொச்சரையர் முனைவர் மு. அப்துல்காதர்
தேனி மாவட்டம், சின்னமனூர் மற்றும் உத்தமபாளையத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்த மு. அப்துல் காதர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் இளங்கலை கணிதப் படிப்பு, மதுரை யாதவர் கல்லூரியில் முதுகலை தமிழ் மற்றும் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியத் தமிழ்த் துறையில், ‘திருக்குர்ஆன் தமிழுரைகளின் நெறிகள்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
உத்தமபாளையம் ஹாஜி கருத்தாராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் 2001 ஆம் ஆண்டில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய இவர், தற்போது இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஆசிரியப் பணியுடன், கல்லூரியில் 2002 முதல் 2011 வரை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரியாகச் செயல்பட்டிருக்கிறார். அதன் பின்னர், 2015 ஆம் ஆண்டு முதல் தேசிய மாணவர் படை அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இதுவரை இவர் எழுதிய 14 நூல்கள் வெளியாகி இருக்கின்றன. சுமார் 40-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் இஸ்லாமியத் தமிழில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘இஸ்லாம் விளக்கம் காட்டும் வாழ்வும் வரலாறும்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கு, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
இளம் ஆய்வாளருக்கான ‘தமிழ்ச்சுடர் விருது’ கம்பம், அத்தாயிக் கல்விக் குழுமத்தின் ‘சிறந்த கல்விச் சேவையாளர் விருது’, தேனி மாவட்டம், பாலார்பட்டி கிராமத்தின் சார்பில், சிறந்த கிராம சேவைக்கான ‘பென்னிக்குக் விருது’உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
மதுரை காமராசர்பல்கலைக்கழகம் 2004 ஆம் ஆண்டில் இவருக்கு, சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிக்கான விருதை வழங்கியது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 2004-2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாட்டு நலப்பணி அதிகாரிக்கான விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|