அ. தொடக்கச் சடங்குகள்
i) சிலுவை அடையாளம் - நாம் மூவோரு கடவுளின் பெயரால், பெற்ற ஞானஸ்நானத்தின் அடையாளமாக திருப்பலியின் தொடக்கத்தில் இதனைப் பயன்படுத்துகின்றோம்.
ii) வாழ்த்தும் வரவேற்பும் - “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்று குரு கூடியுள்ள அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றார். மக்களும் குருவை உம்மோடும் இருப்பாராக என வாழ்த்தி வரவேற்கின்றனர்.
iii) மன்னிப்பு வழிபாடு - செய்த குற்றங்களுக்காக இறைவனின் மன்னிப்பு கேட்டு தாய்மையுடன் திருப்பலி கொண்டாட முயல்கின்றோம்.
iv) சபை மன்றாட்டு - சபையினர் அனைவரின் வேண்டுதல்களையும் உள்ள ஏக்கங்களையும் ஒன்று திரட்டி, குரு இம்மன்றாட்டுச் செபத்தை நிகழ்த்துகின்றார்.
ஆ. இறைவார்த்தை வழிபாடு
i) முதல் இரண்டு வாசகங்கள் - பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் (நற்செய்தி ஏடுகள் நீங்களாக) எடுக்கப்பட்டு இறை வார்த்தையாக வாசிக்கப்படும்.
ii) தியானப்பாடல் - இறைவார்த்தையைக் கேட்ட மக்கள் இறைவனோடு இப்பாடல் மூலமாக ஒன்றிணைகின்றனர்.
iii) மகிழ்ச்சிப்பாடல் - “அல்லேலூயா” என்பதன் பொருள் ஆண்டவருக்குள் மகிழ்கின்றோம். இறைவனைப் போற்றுகின்றோம்.
iv) நற்செய்தி வாசகம் - (தூய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களிலிருந்து காலத்திற்குத் தகுந்தவாறு எடுத்தாளப்படுகிறது. இதனின் விளக்கத்தை மறையுரையாகக் குருவானவர் மக்களோடு பகிர்ந்து கொள்கிறார்.
v) விசுவாச அறிக்கை - இறைவனையும், அவர் பேசிய இறைவார்த்தையையும், அவர் பிரசன்னம் கொண்ட திருச்சபையையும், அது கொண்டுள்ள உண்மைகளையும் ஏற்றுக் கொள்கிறோம் என அறிக்கையிடுகிறோம்.
vi) இறை மக்கள் வேண்டுதல்கள் - நம்பிக்கை கொடுத்த தேவனிடத்தில் வேண்டிய வரங்களை மக்கள் எடுத்துக் கூறுகின்றனர். இவ்வேண்டுதல்களுக்காகத் திருச்சபையும் பரிந்துரை செய்கிறது.
இ. நற்கருணை வழிபாடு
i) காணிக்கை - நமது அன்பைக் காட்ட, நன்றியினைத் தெரிவிக்க, விளைபொருட்களையும், வாங்கின பொருட்களையும், தன்னுடைய அன்பை நமக்குக் காட்டின இயேசு தேர்ந்து கொண்ட உணவுப்பொருட்களை அப்ப இரச வடிவிலும் அர்ப்பணிக்கிறோம்.
ii) உண்டியல் - ஆலயத்தின் தேவைகளுக்கும், அமைப்புத் திருசபையின் தேவைகளுக்கும் மக்களால் தரப்படும் காணிக்கையாகும்.
iii) காணிக்கை செபம் - காணிக்கைப் பொருள்களை மக்களிடமிருந்து பெற்று அவற்றினை இறைவன் ஏற்றுக் கொள்ளும்படியாகவும், பலிக்கு அவைகள் தகுதி பெற வேண்டுகின்றோம்.
iv) கை கழுவுதல் - மகத்து மிக்க பலி நிறைவேற்ற, குரு அகமும் புறமும் தூய்மையாக, செபித்து அருள்பெறும் அடையாளமாக இதனைச் செய்கின்றார்.
v. தொடக்கவுரை - இறைவனிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கும், அவர் நமக்குச் செய்த மீட்புச் செயலுக்கும் நன்றி கூறி, இறை புகழ் கூறும் பகுதியே இது.
vi) பரிசுத்தர், பரிசுத்தர் (தூயவர், தூயவர்) - இறைவனின் மகிமையை இப்பாடல் மூலம் வாழ்த்திக் கூறிப் பாடுகிறோம். (ஓசன்னா- எனில் வாழ்க என்பது பொருள்)
vii) புனிதப்படுத்தும் செபம் - காணிக்கையாகப் பெற்ற அப்ப இரசத்தை ஆவியினால் புனிதப்படுத்தி இறைமகன் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற செபிக்கின்றோம்.
viii) திருவுடல் திரு இரத்தம் - இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் சரீரம். இது உங்களுக்காகச் சிந்தப்படும் புதிய நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம் எனும் இயேசுவின் அர்ப்பணிப்பு வார்த்தைகளைக் கூறும் போது, அவை இயேசுவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாறி முழுமையாகின்றன.
ix) விசுவாசத்தின் மறைபொருள் - வெறும் கண்கள் காணும் அப்பத்திலும் இரசத்திலும், அவரின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் கண்டுணர்ந்து, அவர்பட்ட பாடுகளையும், எதிர்கொண்ட வீர மரணத்தையும், இலட்சிய புருசனாக உயிர்த்ததையும் அறிக்கையிடுகின்றோம்.
x) நினைவு - புனிதர்கள், திருச்சபையின் தலைவர்கள், திருச்சபையின் மக்கள், இறந்தவர்கள் அனைவரையும் ஒரே ஆண்டவரின் பிள்ளைகள் எனும் நோக்கோடு நினைவு கூறுகின்றோம்.
xi) இறுதிப் புகழுரை - அன்பில் ஒன்றான திருச்சபை கிறிஸ்து வழியாகக் கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்குள் பிதாவிற்கு புகழ்ச்சியைச் செலுத்துகின்றது.
xii) கர்த்தர் கற்பித்த செபம் - அனைவரும் குழந்தைகளுக்குரிய மனநிலையோடு, ஆண்டவர் கிறிஸ்து சொல்லிக் கொடுத்த செபத்தினைச் சொல்கின்றனர்.
xiii) சமாதானப் பகிர்வு - திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கு பெறுவோர் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இருக்கிறோம். வேறுபாடுகளோ, பகைமையோ இல்லை என்பதனைக் காட்டுகின்றதன் அடையாளம் இது.
xiv) நற்கருணை விருந்து - ஆன்ம உணவாக ஆண்டவர் வருகின்றார், நற்கருணை வடிவிலே அவரை ஏற்றுக் கொள்ளும் வண்ணம், ஆமென் என்று சொல்லி அவரைப் பெற்றுக் கொள்கிறோம் (ஆமென் எனில் ஆம் என்பது பொருள்)
xv) நன்றி செபம் - இறை மக்களின் நன்றியைத் திருக் கூட்டத்தின் தலைவராக இருக்கும் குரு நன்றி செபமாகக் கூறுகின்றார்.
xvi) பிரியாவிடை - குருவின் ஆசிகளோடு இறைமக்கள் பலியான கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்டு பரந்த உலகில் இனி பலியாக, விடைபெற்றுச் செல்கின்றனர்.
ஈ. திருப்பலியில் உடல் செயல்பாடுகள்
i) எழுந்து நிற்பது - உயிர்த்த இயேசுவுடன் நாமும் இணைந்தவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.
ii) அமர்தல் - இறைவார்த்தையைக் கவனமாகக் கேட்கவும், தியானிக்கவும் எவ்வித சலனத்திற்கும், இடையூறுக்கும் இடம் கொடாதிருக்க இது மேற்கொள்ளப்படுகிறது.
iii) மண்டியிடுதல் - இறைவனுக்கு முன் நாம் ஒன்றுமில்லாதவர்கள் எனும் நிலையைக் குறிக்கிறது.
iv) தலை வணங்குதல் - இறைவனை ஆராதிப்பதற்கும், மரியாதை செய்வதற்கும் அவருக்கு முன் நாம் தகுதியற்றவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.
v) பவனி (வருகை, காணிக்கை, நற்கருணை) - அனைவரும் ஒன்ருகூடி இறைவனை நோக்கி ஆவலுடன் அவர் வழி நடக்கவும், அவரிடம் தஞ்சமடையவும் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்.
vi) நெஞ்சில் அறைதல் - செய்த குற்றத்திற்கு வருந்துகின்ற மனநிலையின் ஓர் அடையாளம்.
vii) கரங்களைக் குவித்தல் - இது நாமும், இறைவனுடன் இணைந்துள்ளோம் என்பதனையும், நமது மரியாதையையும் காட்டுகின்றது.
viii) சமாதானத்தை அறிவித்தல் - ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு, மன்னித்து, மதிப்பளித்து, அன்பு உறவில் வாழத் தயாராக இருக்கிறோம் என்பதன் வெளி அடையாளம்.
உ. திருப்பலியில் பயன்படுத்தப்படும் பொருள்கள்
i) விளக்கு, எரியும் மெழுகுவர்த்திகள் - கிறிஸ்து, உயிருள்ள இறைவனாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம்.
ii) தூபம் - இறைவனை ஆராதிப்பதற்கும் அதனின்று மேலெழும் புகை, போன்று நமது செபங்களும் இறைவனை நோக்கி மேலெழுகின்றன என்பதற்கும் அடையாளம்.
iii) மலர்கள் - இயற்கையின் சிகரம் மலர்கள். அவற்றினைப் பீடத்தின் மீது வைத்து இயற்கை வழியாக இறைவனை மகிமைப்படுத்துகிறோம்.
iv) தண்ணீர் - இறைவனே நமது வாழ்வின் மையம். அவர் இல்லையெனில் நமது வாழ்வு வறண்டுவிடும். அவராலே வாழ்வு பெற்று தூய்மையாக்கப்படுகிறோம் என்பதன் அடையாளம்.
v) அப்பமும் இரசமும் - மனிதன், அவனது உழைப்பு, இன்பங்கள், துன்பங்கள் இவைகளின் முழு உருவாகப் பீடத்தின் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகின்றன.
vi) நற்கருணைப் பாத்திரம், திருக்கிண்ணம், நன்மைத்தட்டு - தினந்தோறும் திருச்சடங்கில் பலியாகும் கிறிஸ்துவைத் தாங்கும் பாத்திரங்கள்.
vii) திரு உடைகள் - குருவின் பணியையும், இத்திருப்பலிக் கொண்டாட்டத்தின் பொருளையும், மக்களின் மனநிலையையும் இவை குறிக்கின்றன.
viii) திருச்சிலுவை - பீடத்தல் நிகழும் பலி, கல்வாரிப் பலியின் நிகழ்வே என்பதனை நமக்கு நினைவுறுத்துகிறது.