பசிலிக்கா அல்லது பெருங்கோவில் (Basilica) எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. கிரேக்க மொழியில் அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால், காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கியக் கிறித்தவ கோவில்களைக் குறிக்கப் பயன்பட்டது.
பசிலிக்கா என்று மாட்சிமையுடன் அழைக்கப்படும் பேராலயங்கள் கீழ்காணும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.
1. தேவாலயத்தின் முன்புறம் கிழக்கு திசையை நோக்கியிருக்க வேண்டும்.
2. சிற்பக்கலை மரபுடன், ஏதாவது ஒரு பாரம்பரிய கட்டிடக் கலையின் (கிரேக்க, ரோமானிய, கோத்திக் அல்லது இந்திய) அடிப்படையில் ஆலயம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. கூண்டு போல் மண்டபம் மிகுந்த பொலிவுடனும், அழகினில் மாட்சிமையுடனும் அமைக்கப்பட வேண்டும்.
4. தேவாலயத்தில் ஏதாவது ஒரு புனிதரின் திருவுடல் வணக்கத்திற்கு உரியதாக வைக்கப்பட்டோ, அல்லது ஏதாவது ஒரு புதுமை மிக்கதும், புகழ் மிக்கதுமான உருவம் அங்குள்ள மக்களால் மகிமையோடு போற்றப்பட்டோ இருக்க வேண்டும்.
5. திருத்தந்தையின் ஆணையால் மட்டுமே ஆலயங்கள் பெருங்கோவில்களாக உயர்த்தப்பட முடியும்.
இந்தியாவில் “பசிலிக்கா பேராலயம்” எனும் மகிமை பெற்றிருக்கும் ஆலயங்கள் இவைதான்.
1. போம் சேசு பேராயலம் - கோவா
கி.பி. 1946ஆம் ஆண்டில் திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் அவர்களால் இத்திருத்தலம் பேராலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கு புனித பிரான்சிஸ் சவேரியாரின் அழியாத் திருவுடல் வெள்ளிப் பேழையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
2. புனித புந்தரா மலை மாதா பேரால – மும்பை
கி.பி. 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் நாளன்று திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர் அவர்களால் பேராலயமாக இவ்வாலயம் உயர்த்தப் பெற்றிருக்கின்றது.
3. புனித தோமையார் ஆலயம் - சென்னை திருமயிலை
கி.பி. 1956ஆம் பத்திநாதர் அவர்களால் பேராலயமாக இவ்வாலயம் உயர்த்தப் பெற்றிருக்கின்றது.
4. அருள்நிறை அன்னை ஆலயம் - மீரட்
கி.பி. 1961ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாளன்று திருத்தந்தை 23ஆம் அருளப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது.
5. புனித ஆரோக்கிய அன்னை பேராயம்
கி.பி. 1962ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் நாளன்று “நிகழ்வின் நினைவை நீடித்திருக்கச் செய்ய” என்ற தம் பாப்பிறை மடல் மூலம், இவ்வாலயத்தை பேராலயமாக உயர்த்தி மகிமை வழங்கிய திருத்தந்தை 23-ஆம் அருளப்பர், அதே ஆண்டில் நவம்பர் 15ஆம் நாளன்று புனித ஆரோக்கிய அன்னை பேராயத்தை உரோமைபுரி “மேரி மேஜர்” பேராயத்துடன் இணைத்துள்ளார்.
6. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் – பெங்களூர் சிவாஜி நகர்
1974ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளன்று திருத்தந்தை 6ஆம் சின்னப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது.
7. பரித்த பனிமய அன்னை ஆலயம் - தூத்துக்குடி
1960ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாளன்று, திருத்தந்தை 23ஆம் அருளப்பர் உரோமபுரி “மேரி மேஜர்” பேராயத்துடன் இணைக்கப்பட இவ்வாலயம், திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் அவர்களால் 1982ஆம் ஜீலை 30ஆம் நாளன்று பேராலயமாக உயர்த்தப்பட்டது.
8. சாந்தா குருசு பேராலயம் - கொச்சி
1984ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் நாளன்று திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது.
9. புனித மரிய அன்னை பேராலயம் - எர்ணாகுளம் (கேரளா)
கி.பி. 1984ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாளன்று திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்ப்பட்டது.
10. புனித ஜெபமாலை அன்னை ஆலயம் - கல்கத்தா
கி.பி. 1988ஆம் ஆண்டு 25ஆம் நாளன்று திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது.
11. புனித வியாகுல அன்னைப் பேராலயம் - திருச்சூர் (கேரளா)
கி.பி. 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாளன்று திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது.
12. புனித லூர்து அன்னை பேராலயம் - பூண்டி
கி.பி. 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் நாளன்று திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது.
13. புனித மரிய அன்னை பேராலயம் - ராஞ்சி
கி.பி. 2004ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாளன்று திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது.
14. புனித அடைக்கல அன்னை பேராலயம் - வளர்பாதம்
கி.பி. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாளன்று திருதந்தை 2ஆம் அருள் சின்னப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது.
15. உலக மீட்பர் பேராலயம் - திருச்சி
கி.பி. 2006ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளன்று திருத்தந்தை 16ஆம் ஆசிர்வாதப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்ப்பட்டது.
16. திருஇருதய பேராயம் - பாண்டிச்சேரி
2011ஆம் ஆண்டு ஜீன் 24ஆம் நாளன்று திருத்தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பர் அவர்களால் பேராலயமாக உயர்த்தப்பட்டது.