தூய ஆவி என்பதற்கு கடவுளின் ஞானம், கடவுளின் ஆற்றல், கடவுளின் சாரம் என்று பல்வேறு பொருள்கள் உண்டு. திரித்துவக் கொள்கையுடைய கிறிஸ்துவப் பிரிவுகளின் படி, தூய ஆவி என்பவர் கடவுளின் மூன்றாம் ஆள் (நபர்) ஆவார்.
தூய ஆவி என்பவர் அதிபுனித திரித்துவத்தின் மூன்றாம் ஆளாக இருக்கிறார். தந்தையாகிய கடவுளிடம் இருந்தும், மகனாகிய கடவுளிடம் இருந்தும் புறப்படும் நித்திய (முடிவில்லாத) அன்பாக இவர் இருக்கிறார். இறைத்தந்தையோடும் இறைமகனோடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறும் இவர், ஆண்டவராகவும் உயிர் அளிப்பவராகவும் இருக்கின்றார். முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே. இயேசுவின் வாழ்விலும் இவர் செயலாற்றி இருக்கிறார். இயேசு கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் சென்ற பிறகு, தூய ஆவியாரை இந்த உலகத்துக்கு அனுப்பி வைத்தார். இவர் திருத்தூதர்களில் செயலாற்றி, திருச்சபை தோன்றி வளரச் செய்தார். திருச்சபையில் இவர் தொடர்ந்து இருந்து, அதற்கு ஒளியும் உயிரும் தந்து, அதைப் புனிதப்படுத்தி பாதுகாத்து வழிநடத்தி வருகிறார். இறைவனில் நிறைவு பெற்றவர்களாய் வாழுமாறு, இவரது செயல் திருச்சபை உறுப்பினர்களின் ஆன்மாவை ஊடுருவிச் செல்கிறது. தமது அருளைப் புறக்கணியாமல் வாழ்பவர்களை, தூய ஆவியார் தூய்மையில் வழி நடத்துகிறார்.
தூய ஆவியார் அருளும் கொடைகள் ஏழு. அவை:
1. ஞானம்
2. மெய்யுணர்வு
3. அறிவுரைத்திறன்
4. நுண்மதி
5. ஆற்றல்
6. இறைப்பற்று
7. இறையச்சம் ஆகியவை ஆகும்.
தூய ஆவியார் அருளும் கனிகள் பன்னிரண்டு. அவை;
1. அன்பு
2. மகிழ்ச்சி
3. அமைதி
4. பொறுமை
5. பரிவு
6. நன்னயம்
7. நம்பிக்கை
8. கனிவு
9. தன்னடக்கம்
10. பணிவு நயம்
11. தாராள குணம்
12. நிறை கற்பு
தூய ஆவியார் அருளும் வரங்கள் ஒன்பது. அவை:
1. ஞானம் நிறைந்த சொல்வளம்
2. அறிவு செறிந்த சொல்வளம்
3. இறை நம்பிக்கை
4. பிணிதீர்க்கும் அருள் கொடை
5. வல்ல செயல் செய்யும் ஆற்றல்
6. இறைவாக்குரைக்கும் ஆற்றல்
7. ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல்
8. பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல்
9. பரவசப் பேச்சை விளக்கும் ஆற்றல்