கிறித்தவ இறையியலின்படி கடவுள், இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) அல்லது அதிபுனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பினும் தந்தை, மகனிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தையிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள்; மூவரும் மூன்று கடவுள்கள் அல்லர். எந்தவித வேறுபாடும் இன்றி, இந்த மூவருக்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மை இருப்பதால் மூவரும் ஒரேக் கடவுளே. இதனால், கிறிஸ்தவ சமயத்தினர் கடவுளை ‘மூவொரு இறைவன்’ என்று அழைக்கின்றனர்.
இறைத்தந்தை
இறைத்தந்தை அல்லது தந்தையாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் முதல் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவர் படைப்பாளராக காணப்படுகிறார். இறை வார்த்தையாகிய மகனை நித்தியத்திற்கும் (முடிவில்லாமல்) பிறப்பிப்பதால் இவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர் எட்டாத ஒளியில் வாழ்கின்றார். விண்ணகமும், மண்ணகமும், நாம் காண்பவை, காணாதவை யாவும் இவராலேப் படைக்கப்பட்டன. இறைத்தந்தை தனது வார்த்தையின் வழியாக அனைத்தையும் படைத்து, தனது ஆவியின் வழியாக அவற்றுக்கு இயக்கம் அளித்தார்.
இறைமகன்
இறைமகன் அல்லது மகனாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவர் மீட்பவராகக் காணப்படுகிறார். இறைத்தந்தையால் பிறப்பிக்கப்படும் நித்திய (முடிவில்லாத) வார்த்தையாக இருப்பதால் இவர் மகன் என்று அழைக்கப்படுகிறார். இவர் வழியாகவே விண்ணகத்தையும், மண்ணகத்தையும், நாம் காண்பவை, காணாதவை அனைத்தையும் தந்தையாகிய கடவுள் படைத்தார்; அனைத்தும் இவருக்காகவே படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். நமக்காக இவர் போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலின்படியே, மரணத்தை வென்று மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்; வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வரவிருக்கிறார்.
தூய ஆவி
தூய ஆவி என்பவர் அதிபுனித திரித்துவத்தின் மூன்றாம் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவர் புனிதப்படுத்துபவராக காணப்படுகிறார். தந்தையாகிய கடவுளிடம் இருந்தும், மகனாகிய கடவுளிடம் இருந்தும் புறப்படும் நித்திய (முடிவில்லாத) அன்பாக இவர் இருக்கிறார். இறைத்தந்தையோடும் இறைமகனோடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறும் இவர், ஆண்டவராகவும் உயிர் அளிப்பவராகவும் இருக்கின்றார். முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே.