உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளைப் புத்தாண்டு நாள் என்று கொண்டாடி வருவது நாமனைவரும் அறிந்ததுதான். ஆனால், கத்தோலிக்கத் திருச்சபை ஜனவரி முதல் நாளை ‘உலக அமைதி நாள்’ என்று கொண்டாடி வருகிறது. உலக மக்கள் அனைவரும் விரும்பி எதிர்பார்க்கின்ற அமைதி உருவாகிட இறைவனை நோக்கி வேண்டுதல் எழுப்பவும், அமைதியின் இன்றியமையாமை பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
கத்தோலிக்கத் திருச்சபை கொண்டாடுகின்ற ‘உலக அமைதி நாள்’ கொண்டாட்டம் எப்படித் தொடங்கியது?
முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலங்களில் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த திருத்தந்தையர்கள், உலக அமைதிக்காக நாடுகளிடையே நல்லுறவை வளர்க்கப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். குறிப்பாக, திருத்தந்தையர்களான பதினைந்தாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் பயஸ் ஆகியோர் உலக அமைதிக்காக பல செயல்களைச் செய்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் பனிப்போர் காலத்தில் இருபத்தி மூன்றாம் யோவான் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் யூனியனின் தலைவர்களைச் சந்தித்து, உலக அமைதிக்காக ஒத்துழைக்கும்படி உருக்கமாக வேண்டிக் கொண்டார். குறிப்பாக, அமைதியின் இன்றியமையாமையை வலியுறுத்தி, "பூமியில் அமைதி" என்னும் தலைப்பில் ஒரு சுற்றுமடலை எழுதி 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் நாளன்று அதனை வெளியிட்டார். அம்மடல் கிறித்தவர்களுக்கு மட்டுமன்றி, நல்லுள்ளம் கொண்ட அனைத்து மனிதருக்கும் எழுதப்பட்டதாகத் திருத்தந்தை குறிப்பிட்டார்.
இருபத்திமூன்றாம் யோவானுக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற ஆறாம் பவுல் என்னும் திருத்தந்தை உலகில் நிலையான அமைதி ஏற்படவேண்டும் என்றால் நாடுகளுக்கிடையே நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும் என்றும், அனைத்துலக மக்களின் வளர்ச்சியே அமைதிக்கு வழி என்றும் வலியுறுத்தி ‘மக்களின் முன்னேற்றம்’ என்னும் தலைப்பில் 1967 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் நாளன்று ஒரு சுற்றுமடல் வெளியிட்டார். இம்மடலும் கிறித்தவ சமயத்தவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்கும் எழுதப்பட்டதாக அமைந்தது.
அமைதியின் தேவையை வலியுறுத்திய கத்தோலிக்கத் திருச்சபை உலக அமைதியை வளர்ப்பதற்கு "உலக அமைதி நாள்" என்றொரு கொண்டாட்டம் பெரிதும் துணையாக அமையும் என்று கருதியது. அதன் பிறகு, திருத்தந்தை ஆறாம் பவுல் 1967ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 8 ஆம் நாளன்று விடுத்த ஓர் அறிக்கையில், இனி வருகின்ற ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி முதல் நாள் "உலக அமைதி நாள்" என்று உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்கத் திருச்சபையால் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். அந்த நாளில் உலக மக்கள் அனைவரும், உலக அமைதியை வளர்க்கத் தங்களையே அர்ப்பணிப்பது சிறப்பு என்றும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், கத்தோலிக்கத் திருச்சபையின் மூலம் "உலக அமைதி நாள்" கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக அமைதியை வளர்ப்பதற்காக மக்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபை ஒவ்வொரு உலக அமைதி நாளுக்கும், ஒரு மையக்கருத்தை அறிவித்து, அதன் வழியில் உலக அமைதி நாளைக் கொண்டாடி வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான அமைதி நாள் மையக் கருத்தாக, ‘உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக’ என்பதை போப் லியோ XIV அறிவித்திருக்கிறார்.
உலக அமைதியின் தேவையை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் பொது அவை பிரகடனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் நாளன்று, ‘பன்னாட்டு அமைதி நாள்’ கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டு 1981ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பன்னாட்டு அமைதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.