கோயில்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. தேவியரைப்புதுப்புது கோலங்களில் அலங்கரித்துக் கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். தேவியர் கொலு வீற்றிருந்து, அருளாட்சி செய்து, உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்கின்றனர். அகிலாண்ட நாயகி, ராஜராஜேஸ்வரி கொலு வீற்றிருக்கிறாள். அருள் பாலிக்கிறாள்.
வீடுகளில் கொலு வழிபாடு: ‘கொலு' என்பது தெலுங்குச் சொல்லின் தமிழ் வடிவம். வீற்றிருத்தல், சேவை சாதித்தல் முதலியன இதன் பொருள்.
கோயில்களில் தேவியைக் கொலு வைத்து வழிபட்டார்கள்: அதைப் போல, வீடுகளிலும், தேவிகளின் பொம்மைச் சிலைகளை அடுக்கி வைத்து வழிபடுவது 'கொலு' வழிபாடு.
புரட்டாசி அமாவாசையன்றே கொலு வைப்பதற்குரிய சரியைச் செயல்கள் தொடங்குகின்றன. அதன் பொருட்டு ஓர் அறையைத் தேர்ந்தெடுத்துப் புனிதமாக்குகின்றனர்.
இதற்கான படிகளை மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது என்று அவரவர் வசதிக்குத் தகுந்தபடி அமைக்கிறார்கள்.
வெள்ளை அல்லது மஞ்சள் துணிகளால் அவற்றைப் போர்த்துகின்றனர்.
முதல் படியின் நடுவில் கலசத்தை வைக்கிறார்கள். வெள்ளி அல்லது செம்பு அல்லது பித்தளைக் குவளையில் பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். தீப ஆராதனை நடைபெறுகிறது. தேவி கலசத்தில் பிரசன்னமாகிறாள். நவராத்திரி வழிபாடும், கொலு வழிபாடும் தொடங்குகின்றன.
இதன் தத்துவம், கலசம்-உடம்பு; பச்சரிசி - உயிர், மாவிலை - அருள் பாலித்தல், தேங்காய் - தேவி. தேவியின் அருள் உயிருக்குக் கிடைக்கிறது என்பது இதன் பொருள்.
தேவியின் அருள் உயிரில் இறங்குவதற்கு மாவிலைகள் துணை செய்கின்றன.
இதேப் போன்று நவதானிய முளைப்பாலிகை வைக்கப்படுகிறது. அதாவது, கொலு வைக்கப்பட்டிருக்கும் அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கிறார்கள். அவை முளைவிட்டுச் செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்பது நம்பிக்கை. இதன் தத்துவம், குபேரன் அருளுகிற பலவகைப்பட்ட செல்வச் செழிப்புகளை நவதானியங்களின் வளர்ச்சி உணர்த்துகிறது. நவதானியங்கள் பல செல்வங்கள்.
கொலுவில் மண், மரம், பீங்கான், பிளாஸ்டிக், உலோகத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை வரிசை வரிசையாக அடுக்கி வைக்கின்றனர்.
தெய்வ வடிவங்கள், புராணக்காட்சி வடிவங்கள் முதலிய தெய்வத் தொடர்பான பொம்மைகளை உயரத்திலுள்ள படிகளில் வைக்க வேண்டும். அதாவது, தெய்வ வடிவங்களை அடுக்கிய படிகளில் அல்லது அதற்கு மேலே இருக்கும் படிகளில் உயிரின, உயிரற்ற பொருள்களின் வடிவங்களை வைக்கக் கூடாது.
முதல் படியில் மரப்பாவைகளை வைப்பது மரபு. தம்பதி பொம்மைகளை வைப்பது மங்கலம்.
மளிகை வணிகரின் பொம்மை ஒன்று, தக்க மளிகைப் பொருள்களுடன் கொலுவில் நிச்சயம் இடம் பெற்றிருக்கக் காணலாம்.
அரச சபை, அணிவகுப்பு, உணவு விடுதி, புகைவண்டி நிலையம் முதலிய தொகுப்புப் பொம்மைகளைத் தரையில் வைப்பது அழகு; நல்லது.
செயற்கை அருவி, ஆற்று நீரோட்டம், ரயிலோட்டம், படகோட்டம் முதலியவற்றில் இக்காலத் தொழில்நுட்பங்களையும், அறிவியல் நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். இவற்றைக் குழந்தைகள் மிக்க ஆர்வத்துடன் கவனிப்பார்கள்.
தம் வீட்டிலுள்ள கொலுவைக் காண வருமாறு பெண்கள், தனக்குத் தெரிந்த மற்றப் பெண்களை அழைக்கின்றனர். வந்தவர்களை விருந்தோம்பி மகிழ்கின்றனர். அவர்கள் கொலுவைக் கண்டு மகிழும் போது, தாமும் மகிழ்ந்து, பெருமிதம் கொள்கின்றனர். கொலுவைக் கண்டவர்கள் விடைபெறும்போது, அவர்களுக்கு ஆடை முதலான பரிசுப் பொருள்களை அளித்து, மஞ்சள் குங்குமத்துடன் வழியனுப்புகின்றனர்.
சிலர் பக்திப் பாடல்களைப் பாடுகின்றனர்; சிலர் படிக்கின்றனர். சிலர் தேவி பாகவதம் முழுவதையும் படித்து முடிக்கின்றனர். சில வீடுகளில் கதா காலட்சேபமும் நடைபெறுகிறது. சுருக்கமாகச் சொன்னால், வீடு, கொலுவின் போது சிறந்த கலைக்கூடமாக கோயிலாக மாறிவிடுகிறது.
விஜய தசமியன்று, பால் நிவேதனம் படைத்து, தீப ஆராதனையோடு கொலு முடிவுறுகிறது.
படியிலுள்ள சில பொம்மைகளைப் படுக்க வைத்துக் கொலுவை முடிப்பது வழக்கம்.
இங்கு கொலுப்படிகள் - பல உலகங்கள்; தேவி - பரம்பொருள்; கலசம் - தேவியின் பிரசன்னம்; பொம்மைகள், உயிரினங்கள்.
அனைத்து உயிர்களுக்கும், உயிருக்குயிராய் அமைந்து, அருள் சுரக்கிறாள் தேவி. தேவியின் அருளால் பாவங்கள் ஒழிகின்றன, தர்மங்கள் நிலைபெறுகின்றன, அஞ்ஞானம் அழிகிறது, மெய்ஞானம் ஒளிர்கிறது.
இந்தக் கொலு வைப்பதன் மூலம்,
1. தேவி வழிபாடு, விருந்தோம்பல் என்ற தமிழர்களின் அடிப்படைப் பாரம்பரியப் பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
2. பெண்களின் பக்தி உணர்வுகளையும், செல்வ வளத்தையும், மனோநிலைகளையும், கலைத் திறனையும் உணர முடிகிறது.
3. பொம்மைகளைச் செய்யும் கலை, வார்ப்புக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, அலங்காரக்கலை முதலிய பல வகைப்பட்ட கலைகள் வளர்கின்றன. சில கலைகள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.
4. பழமையான எல்லாப் பொருள்களும் புனிதமானவை, தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டியவை. சிலர் மிகமிகப் பழைய பொம்மைகளைக் கூடுதல் பொறுப்புகளுடனும், புனிதத்துடனும் பாதுகாக்கிறார்கள். புதிய பொம்மைகளை வாங்குகிறார்கள். ஆகவே, கொலு என்பது பழமையின் பழமை; புதுமையின் புதுமை. இரண்டின் சங்கமம்.
5. குழந்தைகள் கொலுவைப் பார்த்துப் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறார்கள். புராணக் கதைகளை அறிகிறார்கள். அவர்களுக்குப் பக்தி உணர்வுகளைப் பெருக்கக் கொலு மிகவும் பயன்படுகிறது.
6. குடும்பத்தினரின் வாழ்க்கைப் பிரச்னைகளை மறக்கச் செய்து, துன்பச் சுமைகளை இறக்கி, மனதை இலேசாக்கி, எல்லாத் தாக்குதல்களிலிருந்தும் விடுதலை தருகிறது. அத்துடன் கொலு அவர்களைப் பத்து நாள்களுக்கு பக்திப் பாசத்தால் பிணைக்கிறது.