ராமனை மறந்து கடைசியில் ஏன் நிராதரவாகச் செல்ல வேண்டும்? தாய் தந்தை சகோதர சகோதரி யாரும் நம்கூட வரப் போவதில்லை. மாப்பிள்ளையும் சம்பந்தியும் தூர இருந்து விசாரித்துச் செல்வார்கள். நண்பனும் வேண்டியவனும், 'தெய்வச் செயல் இப்படி ஆயிற்று!' என்பர். எல்லாரும் திருடர்கள். ராமநாமம் ஒன்றுதான் முக்திக்கு வழிதேடும்
நம் உயிர் நம் உடலை விட்டு விலகும் போது, பெற்ற தாய் தந்தையரோ, சகோதர சகோதரரோ, சம்பந்தியோ மாப்பிள்ளையோ மற்றும் நண்பர்களோ, வேண்டியவர்களோ நம்முடன் வருவதில்லை. நாம் செய்யும் நல்வினை தீவினைகளே நம்மைப் பின்பற்றுகின்றன. மற்றவை யாவும் மாயை.
உறவினர் யாவரும் திருடர்கள். ஏனென்றால் திருடன் தேவையான பொருளை எடுத்துக் கொண்டு பின்னால் நடக்கும் விளைவுகளை நினைத்துப் பாராமல் சென்று விடுகிறான். அதே போல் யாவரும் நம்மிடம் உதவி பெறும் வரையில் நம்முடன் இருந்து நம்மால் ஏதும் உபயோகமில்லை என்று எண்ணும் போது நம்மை விட்டு விலகிச் சென்று விடுகிறார்கள்.
ஆண்டவனின் நாமம் ஒன்றுதான் நமக்கு நல்வழியைக் காட்டும் சாதனம் என்று கருதி, அவன் நாமத்தை எந்நேரமும் நினைத்து வருமாறு மகான் துக்காராம் வேண்டிக் கொள்கிறார்.