கௌசல்யாதேவி சித்திரை மாதத்தில் நவமி திதியில் புனர்வஸூ நட்சத்திரத்தில் ஸ்ரீராமனைப் பெற்றாள்.
ராமநவமி என்று ராமஜனனத்தை விமரிசையாக விஷ்ணு கோயில்களிலும், பஜனை சங்கங்களிலும் கொண்டாடுவார்கள்.
பிரம்ம வாக்கின்படி, ராமர் மனிதனாக அவதரித்தார். ஸ்ரீராமரின் மனைவி சீதையை அபகரித்துச் சிறை வைத்தான் ராவணன். அதனால் அவனை ஸ்ரீராமர் அழிக்க வேண்டியிருந்தது.
ராமனின் புகழ் கூறுவதால் ராமாயணம் ஆனது. ஆனால் 'சீதாயாஸ் சரிதம் மஹத் – சீதையின் சரிதம் மகத்தானது' என்பர்.
சீதை இல்லாவிடில் ராம அவதாரக் காரணம் முடிந்திருக்குமா?
சிவ என்றால் சிவன், சிவா என்றால் தேவி. அதுபோல் ராம என்றால் ராமர். ரமா என்றால் தேவி. ஆதலால் திருமுருக கிருபானந்தவாரியார் 'ரமாயணம்' என்பார்.
சீதாநவமி என்று உண்டா?
ராமநவமிக்கு அடுத்த சுக்ல நவமி சீதையின் ஜயந்தி தினம்.
இது என்ன புதிது? ஆம்! நம் வைணவ கோயில்களில் கொண்டாடுவதில்லை. வடநாட்டு ராமர் கோயில்களில் சீதா நவமியையும் கொண்டாடுகிறார்கள்.
ராம சஹஸ்ரநாமம் போன்று சீதாசஹஸ்ர நாமமும் உள்ளது. சீதா ஜயந்தி அன்று சீதை சஹஸ்ர நாமம் சொல்லி பூஜித்து தேவி அருள் பெறலாம்.
ஜனகரின் ஊர் ஜனக்புரி நேபாளத்தில் உள்ளது. ஜனகர் பூமாதேவியையே தனக்கு மகளாகப் பெற விரும்பினார். பக்தனின் ஆசையைப் பூர்த்தி செய்வது பகவானின் அல்லது பகவதியின் ஆவலும் அல்லவா?
ஜனகர் ஒரு யாகம் செய்வதற்காக, சீதாமடி என்று பின்னாளில் அறியப்பட்ட இடத்தில் பூமியைக் கலப்பையால் உழுதார். ஓர் இடத்தில் கலப்பை நகரவில்லை; ஏதோ தடுத்தது!
தோண்டிப் பார்த்தால் அங்கு தங்கப்பெட்டியில் ஒரு பெண் குழந்தை! தனது வேண்டுகோளைப் பூர்த்தி செய்தாள் அம்பாள் என்று ஜனகருக்குச் சந்தோஷம். அந்தத் தினம் சீதாநவமி. கலப்பைக்கு 'சீதா' என்று பெயர்.
சீதாமடியில் இன்றும் வெள்ளி கதவுடன் சீதாராம லக்ஷ்மணர்களுக்குச் ஒரு கோயில் உண்டு. ஜனகர் உழுது கண்டெடுத்தவாறு ஒரு பளிங்குச் சிலையும் உண்டு.