இந்து மற்றும் சமணர்களின் புனித நாளாக இருப்பது அட்சய திருதியை. இது சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது. முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் படைக்கப்பட்ட நாள் அட்சய திருதியை. மேலும் இது பரசுராமரின் தோற்ற நாளும் கூட. இந்துப் புராணங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது. பகீரதன் தவம் செய்து புண்ணிய நதியான கங்கையை ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.
'அட்சய' என்றால் சமஸ்கிருதத்தில் 'எப்போதும் குறையாதது' என்று பொருள். மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்பர் பெரியோர். ஆகையால் வணிகத்தைத் தொடங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அந்நாளில் செய்ய வேண்டுமென்று பலரும் விரும்புகின்றனர்.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரான ரிஷபதேவரின் நினைவு நாளாகவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தபஸ்யா எனப்படும் உண்ணா நோன்பு இருக்கும் சமணர்கள் தமது நோன்பை இந்த நாளில் முடித்துக் கொள்கின்றனர்.
இந்து மதத்தில் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று வளர்பிறை நாட்கள் (திதிகள்) மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரைத் திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: சித்திரை வளர்பிறையின் முதல் திதி புது வருடத் தொடக்கமாகவும், சித்திரை வளர்பிறையின் மூன்றாம் திதி அட்சய திருதியையாகவும், ஆவணி வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை வளர்பிறையின் முதல் திதி அரை திதியாகக் கணக்கில் கொண்டு இவை 'மூன்றரை (3 1/2) முகூர்த்தங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி, அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து மூன்றரை முகூர்த்தத்தை வழங்குகின்றன. சோதிட சாஸ்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயிரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.
அட்சய திருதியை நவான்ன பாவம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
அட்சய திருதியை நகை வாங்க உகந்த நாள் என்பது வதந்தி. அட்சய திருதியையில் முதலீடு செய்தால் அது பன்மடங்கு பெருகும் என்பது உண்மை. ஆனால், அது தங்கத்தில் அல்ல; வயலில், நெல்லில்! பண்டையக் காலங்களில் சித்திரை மாதம் அமாவாசையையொட்டி மழை பெய்யும். சித்திரை அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் வருவது அட்சய திருதியை. சயம் என்றால் அழிவு. அட்சயம் என்றால் அழிவற்றது.
அட்சய திருதியையில் நெல் விதைத்தால் மகசூல் அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. நெல் விதைக்க வளர்பிறையே உகந்த காலம். ஏனெனில், தாவரங்கள் வளர நிலவின் ஒத்துழைப்பு அவசியம். தாவரங்கள் யாவும் சந்திரனால் தோன்றின என்கிறது வேதம்.
உலகின் இயற்கை வளங்களைக் கிரணங்கள் பாதிக்கும் என்பதை இன்றைய அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடலில் சீற்றத்தைக் காணலாம். அதுபோல் தாவரங்களைச் சந்திரகிரணங்கள் பாதிக்கும். அமாவாசைக்குப் பின் சந்திரன் வளர நெல் நாற்று நன்கு வளரும். ஆக, அட்சய திருதியை நெல் விதைக்க உகந்த நாள்தானேத் தவிர, பணத்தை விரயமாக்கும் நாளல்ல.
இந்த நாளில் பூஜை, ஹோமம், ஜபம், தானம் போன்றவற்றைச் செய்வார்கள். அத்துடன் தெய்வ பக்தி, உழைப்பு, ஆற்றல், துணிவு பொறுமை, இனிய பேச்சு, பெரியோரை மதித்துப் போற்றுதல் போன்ற நற்பண்புகள் நிறைந்த இல்லத்தில்தான் மகாலட்சுமி நீங்காது இருப்பாள் என்பது தொன்ம நம்பிக்கை.