கி. பி. 1268 ஆம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், சிரவணம் நட்சத்திரத்தில், புதன்கிழமையன்று அனந்தசூரியார் - தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் தூப்புல் (பொய்கையாழ்வார் பிறந்த விளக்கொளி பெருமாள் கோயில் பகுதி) எனும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர் வேங்கடநாதன். பின்னாளில் இவர் 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', ‘உபய வேதாந்தாசாரியர்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பல பெயர்களால் அழைக்கப் பெற்றார்.
வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவரான வேதாந்த தேசிகர், பகவான் தமது அளப்பரிய கருணையால் நமக்கு மனிதப்பிறவி தந்ததோடு, பல உபகாரங்கள் செய்துள்ளார். அந்த உபகாரங்களை எல்லாம் சுட்டிக்காட்டி, அவரிடம் நன்றி கூற வேண்டுமென்கிறார்.
1. நம்மைப் படைத்த பகவான் மிகுந்த கொடையாளி. நாம் உடம்பு மட்டுமல்ல, அழிவற்ற ஆத்மாவாக நம்மைப் படைத்துள்ளானே! அழியாத அந்த ஆத்மாதானே வைகுண்டத்தில் நல்வாழ்க்கை வாழ்கிறது!
2. பகவானின் திருவடிகளைப் பணிந்து நமது ஆத்மாவை ரக்ஷிக்கும்படி வேண்ட அவரே நமக்கு அறிவைத் தந்துள்ளாரே!
3. நாம் எப்படி இருந்தாலும் சரியான தருணத்தில் நம்மைக் கை தூக்கிக் கரையேற்றிடக் காத்திருக்கிறாரே பகவான்!
4. ஏழை, பணக்காரர் என்று வித்தியாசம் பாராதவர் பகவான். நாம் செய்த கடுகளவு புண்ணியத்தையும் மதித்து, மேலும் நல்வழியில் செல்லுமாறு வழி நடத்துகிறாரே!
5. எத்தனையோ பிறவிகளை அனுபவித்த நாம் நற்கதி பெறுவதற்கு எந்தத் தகுதியையும் பெறவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ ஏதோ ஒரு பிறவியில் செய்த நற்காரியத்தையும் பாராட்டி, செய்துவிட்ட மலை போன்ற தவறுகளுக்குக்கூட சிறிய தண்டனைகளைத் தந்து தம்மிடம் ஆட்கொண்டு விடுகிறார் அல்லவா!
6. சத்விஷயங்களில் ஈடுபாடில்லாதவர்களைக் கண்டு நாம் வருந்த வேண்டும். அவர்களுக்குக் கிட்டாதப் பேற்றினை நமக்கு அருளியுள்ளாரே என்று எண்ணி எம்பெருமானிடம் அன்பைப் பெருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த நற்செயல்களின் மூலம் பகவானுக்கு நன்றி கூற வேண்டும்.
7. நாம் உய்வதற்காக ஸ்ருதிகளை வழங்கியுள்ளதற்கு பகவானிடம் நன்றி கொள்ள வேண்டும்.
8. சாஸ்திரங்களில் உள்ள அனைத்தையும் நான் எப்படி முழுவதுமாக அறிவது? இது சாத்தியமா என்று நாம் எண்ணும்போது, அவரே, அதன்படி வாழ்கின்ற ஆச்சார்யர்களையும் ஆழ்வார்களையும் அனுப்பி வைத்து நமக்கு வழிகாட்டுகிறாரே!
பெரியவர்களின் வாழ்க்கையே சாஸ்திரங்களுக்கு விளக்கமல்லவா!
9. விலங்கு, பறவை, மரம், செடி என்று எத்தனையோ ஆத்மாக்களைக் காண்கிறோம். நாம்கூட முற்பிறவிகளில் இவ்வாறு இருந்திருக்கலாம். ஆனால் இப்பிறவியில் அவற்றுக்கில்லாத ஆறாவது அறிவான புத்தியை நமக்குத் தந்துள்ளாரே!
10. மனிதர்கள் சிந்திக்கத்தக்கவர்கள்தான். ஆனால் சத் விஷயங்களைச் சிந்திக்காமலே பலர் மரணமடைந்து விடுகிறார்களே. அவ்வாறின்றி, நேற்று வரை அவர்கள் போலவே இருந்த நம்மையும் 'இனி பிறவி கூடாது' என்று உறுதி பெறும் வகையில் ஆச்சாரியர்களை அனுப்பி நமக்கு வழிகாட்டியுள்ளார் பகவான். அந்தப் பெரியவர்களையோ, சாஸ்திரங்களையோ நிந்திக்கலாமா? நற்கதி அளிக்க நம்மை அல்லவா பகவான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நன்றி கூற வேண்டாமா!
11. நற்குடியில் பிறந்திருந்தாலும் எத்தனை பேருக்கு நல்லோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது! நமக்கு அந்த வாய்ப்பைத் தந்திருக்கிறாரே பகவான்!
12. கருணையுடன் கீதாசார்யனாக நமது அறியாமை இருளகற்ற கீதை பகன்றவன் பகவான். தயக்கமின்றி ஓர் ஆச்சார்யனை நாடி தெளிவு பெற வேண்டும் என்று நமக்கு உணர்த்தும் அவருக்கு நன்றி பலப் பல!
13. தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்த அர்ஜுனன், பகவானின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் தன் அறியாமையை எண்ணி வெட்கி 'கண்ணா, உன் திருவடிகளைப் பணிகிறேன் என்னைச் சீடனாக ஏற்று உபதேசி' என்று கூறவில்லையா! நாமும் அர்ஜுனன் போல் பெருமாளின் திருவடிகளில் வீழ்ந்து கிடக்க வேண்டாமா!
14. ஒரு குருவிடம் சென்று நாம் நல்லுபதேசம் பெறும்போது மனதில் தெளிவு உண்டாகிறதே, இது பகவானின் அனுக்ரகம்தானே!
15. சத்விஷயங்களைக் கேட்கும்படி செய்வதும், அதை நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்கும்படி செய்வதும் பகவான் நமக்குச் செய்யும் உபகாரம்.
16. சத்விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும் சிலரின் துர்போதனைகளினால் நாத்திகம் பேசுவது சாஸ்திரத்தையும், பெரியோர்களையும் நிந்திப்பது போன்றவற்றால் மனம் கலங்கிவிடும். அவ்வாறு கலக்கம் கொள்ளாமல் தெளிவுடன் இருக்கும்படி நம்மைக் காப்பது பகவான்தானே!
17. தாயின் கருவிலிருந்து பிறந்ததால் பிறவிப் பயனடைந்துவிட்டதா? தாய் போல் சாலப் பரிவுள்ள குருவை அணுகி, தத்துவங்களை அறியுமாறு அருள்கிறானே பரந்தாமன். இது எப்படிப்பட்ட பெரும் உபகாரம்!
18. நமது தீமைகளை அகற்றி ஆத்மாவை ஒளிரச் செய்கிறாரே பகவான்!
19. உயர் நிலையாகிய மோக்ஷத்தை அடைவதற்காக, குருவின் வழிகாட்டுதலுடன் ப்ரபத்தி மார்க்கத்தில் பக்தனைச் சரணடையச் செய்கிறாரே பகவான்.
20. நிலையற்ற லௌகீக இன்பத்தில் உழன்று கொண்டிருந்தவர்களான நம்மிடம் நிலையான பேரின்பத்தை அடையும் முயற்சியை உண்டாக்கிவிட்டாரே!
21. குற்றமே புரியாதவன் என்று உலகில் யாருமில்லை. இனி குற்றம் புரிவதில்லை என்று சங்கல்பித்து நம்மை முயற்சி செய்ய வைப்பது மட்டுமல்ல; நமது குற்றங்களைக் கண்டும் நம்மை வெறுத்து ஒதுக்காமல் உள்ளாரே பதித பாவனனான பெருமான்.
22. பகவானைப் பற்றிய உபதேசங்களைக் கிரமமாகப் பழகுவதற்கான நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கித் தருகிறாரே அதற்கும் நன்றி.
23. 'குறையொன்றுமில்லை கோவிந்தா' என்ற மனநிலையை அருளியுள்ளாரே அதற்கும் நன்றி.
24. சரணாகதியினை நம்புவது மட்டுமல்ல, செயல்படுத்துவதும் கடினமே. 'மாமேகம் சரணம் வ்ரஜ' – என்னையே சரணடை என்று அவர் திருவடியில் அடிபணிவதான மனத்தெளிவையும் அல்லவா எனக்கருளி உபகாரம் செய்திருக்கிறார்!
25. பகவானே, பஞ்ச கோச சம்ஸ்காரம் செய்து உங்களிடம் ஆத்ம சமர்ப்பணம் செய்துவிட்டேன். அப்படிச் செய்துவிட்ட என்னை உடலில் உயிர் உள்ளவரை தவறான பாதையில் செல்லாமல் தடுக்கிறாரே, அது சிறிய விஷயமா!
26. அவ்வாறு என்னையும் மீறி அறியாமல் தவறு செய்துவிட்டால் சிறிய கர்மவினை மட்டும் அளித்து என்னை ஏற்றுக் கொள்கிறாரே, அது சிறிய உபகாரமா என்ன!
27. தண்டனைக்குப் பயந்த நமக்கும் பிராயச்சித்தம் என்னும் வழியைக் காட்டி உபகாரம் செய்கிறாரே பகவான்!
28. எங்கு, எப்படி இறப்போம் என்று தெரியாத நிலையில் சரணாகதி அடைந்தவன் மரணமடையும்போது நியமம் ஏதும் பாராமல், வைகுந்த பதவியை அருளும் பரந்தாமனின் உபகாரம் எப்படிப்பட்டது.
29. இருக்கும்போதே பகவத் ஸ்மரணை இல்லையே, மரணத்தின் பிடியிலிருக்கும் போதும், கட்டை போலக் கிடக்கும் போதும் பகவானின் நினைவு வருமாறு அனுக்ரகம் செய்கிறாரே! சாதாரணமான உபகாரமா அது?
30. உடல் எனும் அழுக்குச் சேற்றில் விழுந்த ஜீவனை, முகம் சுளிக்காமல் மலத்தை அப்பிக் கொண்டிருக்கும் குழந்தையைச் சுத்தம் செய்யும் தாய்போல, அன்புடன் பெருமாள் ஜீவனை உடலிலிருந்து தூக்கிச் செல்வது உபகாரம்தானே!
31. எப்படி இருந்தவர்கள் நாம்! நம்மை வைகுந்தத்தில் தம் மடிமீது அல்லவா அமர்த்தி ஆனந்தமடைகிறார் எம்பெருமான்! யார் செய்வார்கள் இப்படி ஓர் உபகாரம்?
32. தந்தையும் தாயுமாய் நின்று நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தி நாம் மகிழ்வதைக் கண்டு ஆனந்திக்கின்ற எம்பெருமான் – பெருமாட்டிக்கு நம்மால் எப்படி நன்றி கூற முடியும்?