‘நைவேத்தியம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘அறிவிக்கிறேன்’ என்று பொருள். இறைவன் நமக்கு அருளும் உணவுப் பொருள்கள் பல. அவன் அருளால் பெறும் அவற்றை அவனது திருவடிகளில் நிவேதித்து, நமது அன்பை, பக்தியை, நன்றி தெரிவிக்கும் அடையாளம்தான் ‘நைவேத்தியம்.’
மிகப்பழைய தமிழில் நைவேத்தியத்தைப் ‘பலி’ என்று வழங்கினர். திருவமுது, படையல், காணிக்கை முதலிய பெயர்களும் நைவேத்தியத்தையேக் குறிக்கின்றன.
நைவேத்தியத்தினை, இயற்கைப் பொருள் நைவேத்தியம், சமைத்த பொருள் நைவேத்தியம், இறைச்சிப் பொருள் நைவேத்தியம் என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1. இயற்கைப் பொருள் நைவேத்தியம்
பால், காய்கனிகள் போன்றவை இயற்கைப் பொருள்கள்; இறைவனின் படைப்பான அவற்றை அவனுக்கேப் படைப்பது உத்தமம்.
2. சமைத்த பொருள் நைவேத்தியம்
பொங்கல் வகைகள், சாத வகைகள், பட்சண வகைகள், பான வகைகள் முதலியன இந்த வகையைச் சாரும். கோயில்களிலும், வீடுகளிலும் நைவேத்தியங்களைச் சமைப்பதற்கு உள்ளத் தூய்மை, உடலுழைப்பு, மேலான பக்தி முதலியவை அவசியம். எனவே சமைத்த பொருள்களைப் படைப்பது உத்தமமானது.
சமைத்த நைவேத்தியங்களில் சிறப்பானது பொங்கல். “பக்தர்கள், ‘பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து’ தெய்வத்தை வழிபட்டனர்" என்று சிலப்பதிகாரம் நைவேத்தியப் பொங்கலை முதன் முதலாகக் குறிப்பிடுகிறது.
சைவ, வைணவ சமயத்தினரும் சிறப்பாக மதிக்கும் ஒரு நைவேத்தியப் பொருள் பொங்கல் ஆகும்.
3. இறைச்சிப் பொருள் நைவேத்தியம்
பழங்காலத்தில் தெய்வங்களின் முன் ஆடு, கோழிகளைப் பலி தந்து, அவற்றின் இறைச்சியைப் பக்குவப்படுத்திப் படைத்தனர். ஆகவே, நிவேதனப் பொருள்களில் மிகப் பழமையானது இறைச்சி. பழைய காலச் சூழலுக்குத் தகுந்த இயல்பான நிவேதனப் பொருளும் இதுவே. உயிரைப் பலி தந்து படைத்ததால், படைக்கப்படும் எல்லா வகைப் பொருள்களையும் ‘பலி’ என்ற பெயரால் அழைத்தனர்.