இறைவனுடன் ஒன்றுபட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது பெரும் நன்மை பயக்கும் என்று ஸ்ரீமத்வாச்சாரியார் கூறுகிறார்.
விரதம் மூலம் உள்ளமும் உடலும் தூய்மை பெறுகிறது.
இந்த விரதத்தின் முக்கியத்துவத்தை முதன் முதலாக ஸ்ரீபத்மநாபர் ஸ்ரீலக்ஷ்மிக்குப் போதித்தார். பிறகு, பிரம்மாவுக்குப் போதித்தார். பிரம்மா நாரதருக்குப் போதித்ததாக பத்ம புராணம் கூறுவதாக ஏகாதசி விரத மகிமை என்ற நூலில் ஸ்ரீவிஜயதாசர் கூறுகிறார்.
ஏகாதசி என்றால் ஒன்றுடன் பத்து கூட்டுவது. அந்த ஒன்று பகவான். இறைவனுடன் ஒன்றுபடுவதற்குப் பத்து ஆசாரங்கள் தேவை.
பரம்பொருளான ஒன்றை அடைய பத்து வழிகள். அவை;
1. தியானம், பிரார்த்தனை, தெய்வ சிந்தனையுடன் இருத்தல்.
2. கண் விழித்தல்.
3. விரத சங்கல்பம் ஏற்றல்.
4. துவாதசியன்று விரதத்தைப் பிரார்த்தனையோடு முடித்தல்.
5. ஒருமுறை மட்டும் தூய நீர் அருந்துதல்.
6. ஏகாதசியின் மகிமையை, புண்ணிய சரிதங்களை பிறருக்கு எடுத்துரைத்தல்.
7. ஏகாதசியில் சிரார்த்தம் வருமானால் அதைத் துவாதசியில் செய்தல்.
8. துவாதசியன்று பிராமணர்களுக்கு அந்தத் திதி போகுமுன் உணவளிக்க வேண்டும்.
9. மாதவிலக்கான பெண்களும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கலாம்.
10. துவாதசியன்று நாமே சமையல் செய்து அதிதி போஜனம் செய்வித்த பின் உபவாசத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
துவாதசியன்று சூரியோதயத்திற்கு முன்பு குளித்து பூஜை, ஜபங்களைச் செய்துவிட்டு வலது உள்ளங்கையிலிருந்து ஒரு சிறிதளவு நீரை உட்கொண்டு ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.
ஏகாதசியின் விரத பலன் முழுமையாக அடைவதற்கு துவாதசியில் சரியான நேரத்தில் பாரணையை முடித்தால்தான் விரதம் முழுமையாகும்.
ஸ்ரீமத் பாகவதத்தில் அம்பரீஷ மஹாராஜா அனுஷ்டித்த விரதம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
ஆயிரம் சூரிய கிரகணங்களும், ஒரு லட்சம் அமாவாசைகளும் சேர்ந்தாலும் துவாதசி பிரார்த்தனையின் முக்கியத்துவத்திற்குப் பதினாறில் ஒரு பங்குகூட ஈடாகாது.
புண்ணிய திதிகளில் முதலாவது துவாதசி என்று ஸ்ரீமத்வாச்சாரியார் சொல்கிறார்.