வைணவத்தின் மூன்று மந்திரங்களைக் மந்திரத் திரையம் என்பர். மந்திரத் திரையத்தை முமுட்சுகப்படி என்பர். படி என்னும் சொல் வைணவத்தில் எழுத்தைக் குறிக்கும். மும் உள் சுகம் படி = திருமாலின் மூன்று உள்ளிருப்புகளில் சுகம் பெறும் எழுத்துக்கள் என்று பொருள்படுவது முமுட்சுகப்படி என்னும் தொடர்.
முதல் மந்திரம்
பெரிய திருமந்திரம் எனப் போற்றப்படும் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரம். நாராயணன் ஆசிரியரும், மாணவரும் தானேயாக இருந்து இதனை ஓதினார் என்பர். திருமங்கை ஆழ்வார் இதனை "நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" எனப் பாடி மகிழ்கிறார்.
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.
(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 948)
இரண்டாம் மந்திரம்
இது 'துவய' மந்திரம் எனப்படும். பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணன் சொல்ல அவரது நெஞ்சில் குடிகொண்டுள்ள திருமகள் கேட்டார்.
பகவானே அடைவிக்கிறவன், அடையத் தக்கவன் என்று சொல்லி நெறிவாசலைக் காட்டினான்.
மூன்றாம் மந்திரம்
கண்ணனையே சரண்டையும் நினைவு மந்திரம் இது. இதனைக் கண்ணன் சொல்ல அருச்சுணன் கேட்டான். திருமழிசை ஆழ்வார் இதனை இவ்வாறு பாடுகிறார்.
”இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் திறத்தமா,
வரர் தரும் திருக் குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர்,
பரந்தசிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்,
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே”
(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 852)
“கருத்த மனம் ஒன்றும் வேண்டா,
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை”
(நம்மாழ்வார்)
“கண்ணன் கழல் இணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே”
(நம்மாழ்வார்)