கி.பி பதினைந்தாம் நூற்றாண்டில் சுவாமி இராமானுசரின் மறுஅவதாரம் என்று வைணவர்களால் போற்றப்படுகின்ற மணவாள மாமுனிகள் ஆணைப்படி திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் இயற்றப்பட்டது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி.
திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும், ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி, இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்களாக கருதப்படுகின்றன.
ஆழ்வார்களுள் ஒருவரான திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சி வகை படைப்புகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. மார்கழி நீங்கலாக, ஆண்டு முழுவதும் திருமலை நடை திறக்கும் பொழுது தாள லயத்தோடு தங்கவாயில் முன்பு கோயில் அந்தணர்களால் நாள்தோறும் பாடப்பட்டு வருகிறது. மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.
சுப்ரபாதம் - 29 பாடல்கள், ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் - 11 பாடல்கள், பிரபத்தி -16 பாடல்கள், மங்களாசாசனம் -14 பாடல்கள் ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கியதே "ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்".