பகவானிடம் பக்தி கொள்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. பக்தி என்பது அவரவர் மனோபாவத்திற்கு ஏற்றதாக அமைகிறது. இப்படி பக்தியை ஒன்பது விதமாக வகைப்படுத்த முடியும். அவை;
1. சிரவணம் - பகவானுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.
2. கீர்த்தனம் - பகவானின் பெருமைகளைப் பேசுவது.
3. ஸ்மரணம் - எப்பொழுதும் பகவானை நினைத்துக் கொண்டிருப்பது.
4. பாத சேவனம் - பகவான் கால்களில் விழுந்து வணங்குவது.
5. வந்தனம் - பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது.
6. அர்ச்சனம் - பகவானுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது.
7. தாஸ்யம் - பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது.
8. ஸக்யம் - பகவானிடம் நட்பு கொள்வது.
9. ஆத்ம நிவேதனம் = பகவானுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வது.
இராமாயணத்தில் ஒன்பது வகை பக்தர்கள்
இராமாயணத்தில் இந்த ஒன்பது வகையான பக்திக்கும் சிலரை உதாரணமாகக் கொள்ள முடியும்.
1. சிரவண பக்தி - அனுமார் - இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.
2. கீர்த்தன பக்தி - வால்மீகி - இராமாயணம் இயற்றியவர்.
3. ஸ்மரண பக்தி - சீதை - அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை இந்த பத்து மாதங்களில் இராமனையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
4. பாதசேவன பக்தி - பரதன் - இராமனின் பாதுகையை இராமனாக நினைத்து வணங்கியவன்.
5. வந்தன பக்தி - வீபீஷணன் - இராவணனின் தம்பியாக இருந்த இவன் இராமனையே வணங்கி வந்தான்.
6. அர்ச்சன பக்தி - சபரி - இராமனுக்கு நல்ல பழங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பழத்தையும் தானே கடித்துப் பார்த்து அளித்தவள்.
7. தாஸ்ய பக்தி - இலட்சுமணன் - இராமனுடனேயே இருந்து அவரதி சொல்படி நடந்தவன்.
8. ஸ்க்ய பக்தி - சுக்ரீவன் - இராமனுடன் நட்பு கொண்டவன்.
9. ஆதம நிவேதனம் - ஜடாயு - இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற முயன்று தன் உயிரைக் கொடுத்தவர்.