உலோகங்களில் மிகவும் தூய்மையானது தங்கம். அதுவே விலைமதிப்பிலும் மிகவும் உயர்ந்தது. அதைத்தான் நகை செய்வதற்காக நெருப்பில் போட்டு உருக்கி, சுத்தியால் தட்டி, நீட்டி, வளைத்துச் சரிப்படுத்துகிறார்கள். பயிர்களில் மிக இனிமையானது கரும்பு. அதைத்தான் நாம் நசுக்கிக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் காய்ச்சுகிறோம். நல்ல பொருட்களுக்கு எப்போதும் இப்படிப்பட்ட அனுபவம் உண்டாவது வழக்கம். ஆனால், அதனால் நன்மையே விளையும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாண்டவர்கள், வாழ்க்கையில் மிகவும் துன்பமடைந்தனர். ஆனால், அதற்காக அவர்கள் சலித்துப் போகவில்லை. தாயின் சொற்படி நடந்து, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காட்டிய வழியைப் பின்பற்றி வாழ்க்கையை நடத்தினார்கள். தொடர்ந்து துன்பங்கள் வந்த போதும் அறநெறியிலிருந்து அவர்கள் பிறழவில்லை.
பீஷ்மர் குருக்ஷேத்திரத்தில் அம்புகள் மீது மரணப் படுக்கையில் இருந்தபோது கண்ணீர் வடித்தார். "பிதாமகரே, தாங்கள் ஏன் கண்ணீர் வடிக்கிறீர்கள்?" என்று கேட்டான் அர்ஜுனன்.
அதற்கு பீஷ்மர், "நல்லவர்களாகிய நீங்கள் (பாண்டவர்கள்) இதுவரையில் பட்ட துன்பங்களெல்லாம் என்னுடைய மனத்திரையில் தெரிகின்றன. அதனால்தான் கண்ணீர் வடிக்கிறேன். ஆனால் இன்னொன்றும் எனக்குப் புரிகிறது. நல்லவர்களுக்கு ஆண்டவன் எப்போதும் கூடவேத் துணை இருப்பான். பதவி ஆசையோ, பணத்துக்கான மோகமோ இன்றி அவர்கள் வாழும் போது, வாழ்க்கையின் நன்மைகளை ஆண்டவன் அவனாகவே முடிவில் கொண்டு வந்து கொடுப்பான். இதை நான் இந்த வேளையில் உணர்கிறேன்" என்று கூறினார்.
பீஷ்மர் சொன்ன இந்த வார்த்தைகளை நாம் நமது மனதில் கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவன் சோதனைகளைக் கொடுப்பது - நம்முடைய மனதைப் பக்குவப்படுத்தி நல்ல பண்புகளை உண்டாக்குவதற்காகத்தான். அந்த முயற்சியில் நாம் கடவுளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால், அவர் பத்து அடிகள் நம்மை நோக்கி வருவார்.