சைவ சமயத்தின் அன்பு, பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்கள் போன்று அறிவு நெறியை வளர்த்தவர்கள் சந்தானக் குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களை சைவ சமய சந்தானாசாரியார்கள் என்றும் அழைப்பதுண்டு. சந்தானக் குரவர்களை அகச்சந்தானக் குரவர்கள், புறச்சந்தானக் குரவர்கள் என இருவகையினர்.
திருக்கைலாய பரம்பரையிலிருந்து தொடங்கும் திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். திருகைலாய பரம்பரை என்பது நந்திதேவரேக் குருவாகக் கொண்டு ஆரம்பித்தது. நேரடியாக கைலாயத்துடன் தொடர்பு கொண்டமையால் இவர்களை அகச்சந்தான குரவர் என்று அழைக்கின்றனர்.
அகச்சந்தான குரவர்களில் நான்காமவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வரும் புறச்சந்தான குரவர்கள் ஆவர். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் முதலிய சைவ ஆதீனங்கள் உமாபதி சிவாச்சாரியாரின் சீடப் பரம்பரையால் தோற்றி வைக்கப்பட்டவையாகும்.