திருச்செந்தூரில் வழிபடும் பக்தர்களுக்கு, பன்னீரிலையில் திருநீற்றை வைத்து மருத்துவ மகாப் பிரசாதமாகப் பல நூற்றாண்டுகளாக வழங்கி வருகின்றனர்.
திருச்செந்தூர் பன்னீரிலைத் திருநீற்றைப் பூசினாலும், புசித்தாலும் பல நன்மைகள் விளைகின்றன; பல நோய்கள் தீர்கின்றன என்பது இங்கு வந்து வழிபடுபவர்களின் நம்பிக்கை.
பன்னீரிலைத் திருநீறு குறித்து மேலும் சில சிறப்புகளை அறிவோம்...
சிவனை அர்ச்சிக்க ஏற்றது வில்வ இலை. பன்னீரிலையும் அர்ச்சிக்கப் பயன்படுத்தலாம். திருச்செந்தூரில் பன்னீர் மரங்களாக இருப்பவர்கள் தேவர்கள்; பன்னீர் இலைகளாக இருப்பவைகள் வேதங்கள். எனவேப் பன்னீரிலைகள் தெய்வத்தன்மையும் மருத்துவத் தன்மையும் நிறைந்தவை என்கின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பன்னீரிலையிலும் பன்னிரண்டு நரம்புகள் இருக்கின்றன. இவை ஆறுமுகனின் பன்னிரண்டு திருக்கைகள். ஆகவே, பன்னீரிலையில் வைத்த திருநீற்றை ஏற்பது என்பது, ஆறுமுகனே தன் திருக்கைகளால் திருநீற்றை அனைவருக்கும் அருள்வதற்குச் சமம் என்கின்றனர்.
விசுவாமித்திரரின் காசநோய் அகல, முருகன் அவருக்குப் பன்னீரிலைத் திருநீற்றை அருளினான். அவருக்கும் நோய் அகன்றது. காசநோய்க்கு ஒரு மருந்து இந்தத் திருநீறு என்பதை இதன் வழியாக உணரலாம்.
அபிநவ குப்தரின் ஏவலால் ஸ்ரீசங்கர பகவத்பாதர் அவர்களையும் காச நோய் தாக்கியது. அவர் திருந்செந்தூர் முருகனருளை மனமுருகி வேண்டினார். பன்னீரிலைத் திருநீற்றை உண்டார். முருகன் அருள் காச நோயைத் தணித்தது என்று சொல்கின்றனர்.
முருகனைப் போற்றிச் சுப்பிரமணிய புஜங்கம் என்ற நூலை ஆதிசங்கரர் வடமொழியில் அருளினார். அதன் 25 -ஆம் சுலோகத்தில், “சுப்பிரமணியனே! உனது பன்னீரிலை விபூதியைக் கண்டால் குட்டம், கயம், நீரிழிவு, சுரம், குன்மம் முதலிய நோய்கள் நீங்குகின்றன. பூதம், பிசாசு, தீவினைகள் முதலிய அனைத்தும் விலகி ஓடுகின்றன" என்று பன்னீரிலைத் திருநீற்றின் மகிமைகளைத் தொகுத்துக் கூறுகிறது.
ஸ்ரீசங்கர பகவத்பாதர் அவர்களின் ஒவ்வொரு திருவாக்கும் சத்திய வாக்காகும். திருநீற்றைப் பற்றிய அவரது வாக்கும் அப்படியே.
பன்னீரிலை, திருநீற்றின் மருத்துவ நலன்களையும், மணத்தையும், புனித குணத்தையும் பொதிந்து காப்பாற்றுகிறது. பன்னீரிலையும், திருநீறும் தமது மருத்துவ நலன்களை ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்கின்றன. ஆகவே, நோய்கள் தீரப் பன்னீரிலையுடன் திருநீற்றைத் தக்க நியமங்களுடன் புசிக்கப்பட வேண்டும். அவற்றின் சாந்த குணச்சக்திகளால் நோய்கள் குணமாகின்றன.