துர்க்கம்' என்றால் அகழி என்பது பொருள். கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும் அகழி உள்ளே இருப்பவர்களுக்குப் பாதுகாப்பு தருகிறது; எதிரிகளை நுழைய விடாமல் தடுக்கிறது. அதுபோல் அடியார்களுக்கு அகழி போல் அரணாக இருந்து பாதுகாப்பவள் ‘துர்க்கை’ எனப்பட்டாள்.
துர்க்கமன் என்னும் அரக்கன் வேதங்களை ஒளித்துத் தேவதைகளை அடக்கினான். உலகில் அதர்மம் மேலோங்கச் செய்தான். அந்தத் துர்க்கமனை அழித்ததால் அம்பிகை துர்க்கை எனப்பட்டாள். மகிஷாசுரனை அழிக்க மூன்று சக்திகளின் ஒன்றிய வடிவமாகத் தோன்றியவள் துர்க்கை. இவளைத் தமிழில் 'கொற்றவை' என்றும், 'மகிடற் காய்ந்தாள்' என்றும் கூறுகின்றனர்.
வெவ்வேறு விதமாக அருள் புரிந்த நிலையில் நவ துர்க்கைகளாகவும் அவள் போற்றப்படுகிறாள்.
1. பிறவிப் பெருங்காட்டை அழிப்பவள் வன துர்க்கை.
2. திரிபுரம் எரிக்கச் சிவனுடன் சென்றவள் சூலினி துர்க்கை.
3. முருகன் உதித்த போது அக்கினிக்கும் வாயுவுக்கும் அருளியவள் ஜாதவேதோ துர்க்கை.
4. பண்டாசுரனுடன் போர் செய்தபோது சக்திச் சேனைகளைக் காக்க, தானே அனல் பிழம்பாகி அரண் அமைத்தவள் ஜ்வாலா துர்க்கை.
5. தட்ச யாகத்தின் முடிவில் வெகுண்ட சிவனைச் சாந்தப்படுத்தியவள் சாந்தி துர்க்கை.
6. பார்த்தனுக்குப் பாசுபதம் அளிக்கச் சென்ற சிவனுடன் வேட்டுவச்சி வடிவில் சென்றவள் சபரி துர்க்கை.
7. குண்டலினி யோகிகளுக்கு ஒளியாய் நின்று உதவுபவள் தீப துர்க்கை.
8. அமுதம் பங்கிடத் திருமாலுக்கு உதவியவள் ஆசுரி துர்க்கை.
9. ஸ்ரீராமரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த அசுரன் 'லவணன்.' அவனை சத்ருக்கினன் வென்று வரப் பிரார்த்தித்து ஸ்ரீராமர் வழிபட்ட லவண துர்க்கை.