ஆறு வகை பகைவர்கள்
மு. சு. முத்துக்கமலம்

ஆன்மாக்களாகிய நமக்கு, என்ன என்ன வகையிலோ இடர்கள் வருகின்றன; இந்த இடர்களில் மிகவும் கொடியது பகையால் வரும் இடரேயாகும். பகையில்லாத ஒருவனே அமைதியாக வாழ இயலும். பகைவர்களை ஆறு வகையினராக வகைப்படுத்தலாம் என்கிறார் திருமுருக கிருபானந்தவாரியார். வாங்க அவர் சொல்லும் ஆறு பகைவர்கள் யார்யாரென்று பார்க்கலாம்.
1. புறப்பகை
தேவர்கள் பொன்னுலகவாசிகள். கற்பக மரம், காமதேனு, ஐராவதம், உச்சைசிரவம், அரம்பை மாதர்கள், சிந்தாமணி முதலிய பல நலன்கள் அமைந்திருந்தும் அவர்கள் சூராதி அவுணர்களாகிய பகைவரால் பல காலம் ஆற்றொணாத அல்லல் உற்றார்கள். ஆதலின் ஒரு வீட்டிலோ நாட்டிலோ பகை ஏற்படுமாயின் வாழ்வது அரிது. மனதில் சிறிதுகூடச் சாந்தியே இராது. தானவர்களது பகையால், வானவர்கள் பலகாலும் வருந்தினார்கள். கூனியின் பகையால் இராமர் இடா்ப்பட்டார். துரியோதனனது பகையால் பாண்டவர்கள் பரிதவித்தார்கள்.
2. அகப்பகை
அன்றி அகப் பகையும் உள்ளது. அது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் எனப்படும்.
``இந்தக் காமாதி அறுபகைவர்க்கு நாம் அஞ்சுதல் கூடாது. புறப் பகை யனைத்தும் வென்றேன், அகப் பகையையும் வெல்லுவேன்'' என்று தசரத வள்ளல் கூறுகிறார்.
1. காமம்
இதுதான் முதற் பகை. காமம் என்ற சொல்லுக்கு ஆசை என்பது பொருள். காமத்தால் ஆவி துறந்த தசரதர் மகன் மீது அளவற்ற ஆசை வைத்தார். அதனால், மகனுடைய பிரிவு என்ற துயர், அவருடைய உயிருக்கு இறுதியை நல்கியது. மக்கள் மீது அன்பு வைக்க வேண்டும்; ஆசை வைக்கக்கூடாது. மகன் மீது அன்பு வைத்த கௌசலை வாழ்ந்தாள். ஆசை வைத்த சக்கரவர்த்தி மாய்ந்தார். அதாவது, அன்பு - வாழ வைக்கும், ஆசை - தாழ வைக்கும்.
2. குரோதம்
வடமதுரையை ஆண்ட உக்ரசேனனுடைய முதலமைச்சன் சூரசேனன். இவருடைய மக்கள் இரண்டு பெண்கள்; ஒரு ஆண். 1. குந்திதேவி, 2. சாத்துவதி, 3. வசுதேவர். குந்திதேவியின் மைந்தராகிய யுதிஷ்டிரர் ராஜசூயம் என்ற பெருவேள்வியைச் செய்தார். அதன் முடிவில் முதல் தாம்பூலம் யாருக்குத் தருவது என்று யுதிஷ்டிரர் கேட்டார்.
வியாசமுனிவர், ''ஞானபானுவாகிய கண்ணபிரானே முதல் மரியாதைக்கு உரியவர்'' என்றார்.
அதன்படியே யுதிஷ்டிரர் முதல் தாம்பூலத்தை யதுகுல நந்தனராம் வாசுதேவருக்கு வழங்கலுற்றார்.
அப்போது வடவைக் கனல் கொதித்தது போல் சீறியெழுந்து தடுத்தான் சிசு பாலன்.
குந்தியின் தங்கை சாத்துவதி, அவள் சேதி நாட்டு மன்னன் தருமகோஷனை மணந்தாள். அவளுடைய மகன் சிசுபாலன்; தருமருக்குச் சிற்றன்னையின் மகன் சிசுபாலன். கண்ணபிரானுக்குச் சிறிய அத்தையின் மகன் அவன். ஆகவே சிசுபாலனுடைய தாய்மாமன் மகன் கண்ணன்.
கண்ணனுக்கு வரும் பெருமையைக் கண்டு, குரோதம் உற்றான். கண்ணபிரானுடன் எதிர்த்துப் போரிட்டு மடிந்தான்.
3. லோபம்
ஒரு மனிதனிடத்தில் ஆயிரக்கணக்கில் நற்குணங்கள் அமைந்திருப்பினும், உலோபம் என்ற ஒரு தீக்குணம் இருப்பின், அந்த ஒன்று ஏனைய நற்குணங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.
``தாடகை என்ற ஒருத்தி, வளமையான வனம் முழுவதையும் அழித்துவிட்டாள். உலோபமானது, சகல நற்குணங்களையும் அழிப்பது போல் என உணர்க'' என்று ஸ்ரீராமருக்கு விச்வாமித்திர முனிவர் கூறுகிறார்.
பாண்டவருக்குப் பாதி ராஜ்யம் சேர வேண்டும். சமாதானத்தை விரும்பிய தர்மர், கண்ணபிரானைத் தூது அனுப்பி, ஐந்து வீடுகள் மட்டும் தந்தால் போதும்; ஒற்றுமையாக வாழலாம் என்று கேட்டார். மூடனாகிய துரியோதனன், ஐந்து வீடுகளைத் தந்திருந்தால் பரம சுகமாகச் சுற்றம் நண்பர் சூழ வாழ்ந்திருப்பான். ஊசி நாட்டும் இடமும் தரமாட்டேன் என்று மறுத்தான். இந்த உலோபகுணம் ஒன்றால், துரியோதனன் தன் குலத்துடன் மாய்ந்தான்.
4. மோகம்
மோகத்தால் முழுவதும் அழிந்தவன் இராவணன். தன் மனைவியருடன் இனிது வாழ்ந்திருக்கலாம், பிறன் மனைவியாகிய சீதை மீது மோகம் வைத்து, மூவுலக ஆட்சியை முற்றிலும் துறந்து இறந்தான்.
5. மதம்
ஆயிரத்தெட்டு அண்டங்கட்கும் நான் தலைவன்; எனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று, தருக்குற்று அழிந்தான் சூரபத்மன். மனிதனிடம் மதம் புகுந்தால் அழிவான். யானைக்கு கன்ன மதம், கரட மதம் என்ற மும்மதங்கள் உண்டு.
அது போல் மனிதனிடமும் தன் மதம், வித்யா மதம், குலமதம் என்ற மும்மதங்கள் இருக்கின்றன. இந்த மதங்களான மும்மதங்களால் அழிகின்றர் பலர்.
6. மாச்சர்யம்
கம்சன் என்ற யதுகுலவேந்தன் தன் தங்கையின் மைந்தரான கண்ணபிரான் மீது மாத்சர்யம் கொண்டு, நாசம் அடைந்தான். ஆதலால் இந்த அரிஷ்ட வர்க்கம் என்கிற உட்பகை ஆறையும் வென்று மனிதன் சாந்தி பெறுதல் வேண்டும்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|