சிவபெருமான் ஆலயங்களில் லிங்க வடிவில், அபிஷேகப்பிரியராக அன்றாடம் அபிஷேகங்களை ஏற்கிறார். ஆனால், நடராஜராகக் காட்சியளிக்கையில் ஒரு வருடத்திற்கு ஆறு நாட்களில் மட்டுமே அபிஷேகம் கொள்கிறார்.
அவையாவன:
1. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று - அதிகாலையில்
2. மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் - காலை சந்தியில்
3. சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தன்று - உச்சி கால நேரத்தில்
4. ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று - பிரதோஷக் கால நேரத்தில்
5. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் - மாலைச் சந்தியில்
6. புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் - அர்த்த யாமத்தில்
பொதுவாக சிவனைத் தரிசனம் செய்ய, பிரதோஷக் காலம் உகந்தது.
நமக்கு ஒரு நாளைக்கு ஒரு பகல் ஒரு இரவு உள்ளது. அதைப் போல நமது ஒரு வருடக் காலம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி முடிய உள்ள உத்தராயணம் அவர்களுக்குப் பகலாகவும், ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்களான தக்ஷிணாயணம் அவர்களுக்கு இரவாகவும் உள்ளது.
தேவர்களின் கணக்குப்படி, ஆனி மாதம் அவர்களுக்குப் பகல் பொழுதின் கடைசி நேரமான பிரதோஷ நேரமாகும். அம்மாதத்தில் உத்திர நட்சத்திரம் இருக்கும் போது, சிவபெருமானுக்குரிய பிரதோஷக் காலத்தில் நடராஜப் பெருமான் திருமேனிக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை செய்து மகிழ்தலையே ஆனித் திருமஞ்சனம் என்கிறோம்.
சிவபெருமான், நமக்குரிய காலக் கணக்கின்படியான பிரதோஷ நாட்களில் தரிசித்தால் பெரும் பலன் கிட்டுகிறது.
தேவர்களின் காலக் கணக்கின்படியான பிரதோஷ கால வேளையான ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஆனித் திருமஞ்சனத்தில் நடராஜர் அபிஷேக, அலங்கார தீபாராதனை தரிசனம் கிடைக்கப் பெற்றோரது வினைகள் முற்றிலும் நீங்கி முக்தியும் பெறுவர்.