சிவலிங்கம் பரார்த்தலிங்கம் அல்லது தாவரலிங்கம் எனவும், ஆன்மார்த்தலிங்கம் அல்லது இட்டலிங்கம் எனவும் இரு வகைப்படும்.
அனைவரும் வழிபடுவதற்காகத் திருக்கோயில்களில் நிலையாக நிறுவப்படுவது பரார்த்தலிங்கம் அல்லது தாவரலிங்கம் எனப்படும். தானே தோன்றியதாயின் அது சுயம்புலிங்கம் எனப்படும். நிறுவப்பட்டதாயின் நிறுவியவருக்கேற்பப் பெயர் பெறும். விநாயகர் முதலிய கணர்களால் உருவாக்கப்பட்டது காணலிங்கம். தேவர்களால் உருவாக்கப்பட்டது தைவிகலிங்கம் இருடிகளால் உருவாக்கப்பட்டது ஆரிடலிங்கம்; மானிடரால் உருவாக்கப்பட்டது மானுடலிங்கம். பரார்த்தலிங்கத்தில் சிவபெருமான் சங்காரகாலம்’ வரை சாந்நித்தியராயிருந்து ஆன்மாக்களுக்கு அனுக்கிரகம் செய்வார். ஆதிசைவ மரபில் உதித்து, மூவகைத் தீட்சையும், ஆசாரிய அபிசேகமும் பெற்று, வேதாகமம் கற்று வல்ல ஆசாரியர்களே பரார்த்த லிங்கத்துக்குப் பூசை, திருவிழா முதலியன செய்தற்குரியோர் ஆவர்.
தீட்சை பெற்றவர்கள், தாமே சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி வழிபட்டு இன்புற வேண்டும் என்ற விருப்பத்தால், தீட்சை அளித்த குருவிடமிருந்து பெற்று, அவரது உபதேசப்படி பூசிக்கும் சிவலிங்கம் ஆன்மார்த்தலிங்கம் அல்லது இட்டலிங்கம் எனப்படும். அது சுவர்ணலிங்கம் படிகலிங்கம், இரத்ததினலிங்கம், சைலலிங்கம் எனப் பலவகைப்படும். ஆன்மார்த்த பூசை ஆயுட்காலம் முழுவதும் செய்தற்குரிய அங்கக் குறைபாடு, பிணி முதலியன இல்லாதவர்களாயும், சிவ பூசைக்கான விதிகளையறிந்து கடைப்பிடிக்க வல்லவராகவும் உள்ளவர்களே முன் கூறிய இலிங்கங்களை நிறுவி வழிபடுவதற்குரியவர்களாவர்.
மற்றவர்கள், பூசித்தவுடன் ஆற்றிலேனும், குளத்திலேனும் விடப்படும் சணிகலிங்க பூசையேச் செய்தற்குரியவர். சணிகலிங்கம் என்பது மண், அரிசி, அன்னம், ஆற்று மணல், கோமயம்,. வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், சர்க்கரை. மா முதலியவற்றுள் ஒன்றால் சிவலிங்க வடிவாய் அமைத்துப் பூசிக்கப்படுவது.