அகோபில தலத்தில் ஒன்பது விதமான வடிவங்களில் நவ நரசிம்மத் தோற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவை;
1. ஜ்வாலா நரசிம்மர்
'எங்கிருக்கிறான் உன் நாராயணன்?' என்ற இரண்யகசிபுவின் அறைகூவலுக்குப் பதிலாக, பிரகலாதன், 'தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்!' என்றவுடன், கோபத்தின் உச்சியில் அவன் தன் கதையினால் தனது ஆயிரம் தூண்கள் கொண்ட அரண்மனையில் ஒரு தூணைத் தாக்க, அதே நொடியில் சிம்ம முகமும், மனித உடலும், வஜ்ர நகங்களும் கொண்டு தோன்றிய கோலம்.
2. அகோபில நரசிம்மர்
கருடன் செய்த கடும் தவத்திற்கு மெச்சி, இரண்யகசிபுவைத் தனது மடியில் போட்டு வதை செய்யும் கோலத்தில், சக்தி ஸ்வரூபனாக, மலைக் குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு சுயம்புவாகத் தோன்றிய மூர்த்தி.
3. மாலோல நரசிம்மர்
மா என்றால் திருமகள். லோலா என்றால் காதல். லட்சுமி மேல் காதல் கொண்டவர். மகாலட்சுமித் தாயாருடன் ஸ்ரீய: பதியாய் லக்ஷ்மி நரசிம்மராக இருந்து அருள்கிறார் பெருமாள். தாயாரும் பெருமாளின் இடத்தொடையில் ஆலிங்கன கோலத்தில் அமர்ந்து ஆனந்தமாக அருள்கிறார்.
4. க்ரோடா நரசிம்மர்
க்ரோடா என்றால் கோரைப்பல். கோர வராகமாகத் தோன்றி, இரண்யகசிபுவின் சகோதரன் இரண்யாட்சன் பாதாளத்தில் ஒளித்து வைத்த மண்மகளான தனது துணைவியாரைக் கோரைப் பற்களில் ஏந்தி வந்து அவருக்கு சரம சுலோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை சாதிக்கும் மூர்த்தி.
5. காரஞ்ச நரசிம்மர்
காரஞ்ச என்றால் தெலுங்கில் புங்க மரம் என்று பொருள். அனுமன் செய்த தவத்திற்கு மெச்சி ராமராக அருள் புரிய, வனத்தில் சுயம்புவாகத் தோன்றியவர். 'விஷ்ணுவாக அல்ல ராமனாகவேத் தரிசிக்க விரும்புகிறேன்' என்று அனுமன் வேண்ட, வில், அம்பு தாங்கி நரசிம்மர் ராமனாகவும், ஆதிசேஷன் குடைபிடிக்க வைகுண்ட நாதனாகவும் அருளுகிறார்.
6. பார்கவ நரசிம்மர்
பார்கவர் என்ற முனிவர், திருமகள் தன் குழந்தையாக வரவேண்டும் என்று தவம் செய்து ஸ்ரீயை மகளாகப் பெற்றவர். இவர் பெருமாளை நரசிம்மமூர்த்தியாகத் தரிசிக்க வேண்டுமென்று தவம் செய்ய, இரண்யகசிபுவைத் தன் மடியில் வைத்து குடலை மாலையாகப் போடும் உக்ர நரசிம்மராக அருகில் கைகூப்பி பெருமாளின் கருணையை வியந்த வண்ணம் பிரகலாதன் நிற்க, அருளும் மூர்த்தி.
7. யோகானந்த நரசிம்மர்
பிரகலாதனுக்குக் குருவாக அமர்ந்து யோக நெறியைக் கற்பித்த நரசிம்மர். ஆதிசேஷன் மேல் கால்களை மடக்கி யோகக் கோலத்தில் யோக முத்திரையில் அருளும் பெருமாள்.
8. சத்ரவட நரசிம்மர்
சத்ரம் என்றால் குடை. வடம் என்றால் ஆலமரம். ஒரு பெரிய ஆலமரத்தினடியில் ஆனந்தமாக பத்மாசனத்தில் அமர்ந்து, 'ஹாஹா ஹூஹூ' என்னும் இரு கந்தர்வர்களின் இனிமையான சங்கீதத்தைச் செவிமடுத்தபடித் தாளம் போடும் கோலத்தில் சாந்த நரசிம்மராக அருளும் பெருமாள்.
9. பாவன நரசிம்மர்
நம்முடைய வினைகளைத் தீர்த்து, இந்த உலகப் பிறவிச் சுழலிலிருந்து நம்மைக் கரையேற்றி, இப்பிறவிப் பிணியிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவர். முருகன் வேடர்குலப் பெண் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டது போல, செஞ்சு இனத்தில் பிறந்த பெண்ணை திருக்கல்யாணம் செய்து கொண்டு செஞ்சுலக்ஷ்மி தாயாருடன் காட்சி தரும் நரசிம்மர்.