சிவலிங்கம் எவ்வாறு தோன்றியது என்பதற்கு கேரளத்தில் ஒரு புராணக் கதை உள்ளது.
அந்தக் கதை இதுதான்;
பரமசிவனை பால்ய ஆதித்தர்கள் என்ற முனிவர்கள் ஒரு முறை வேண்டி மிக உக்கிரமான யாகம் ஒன்று மேற்கொண்டார்கள்.
யாகத்தின் உக்கிரத் தன்மையையும், முனிவர்களின் தவ வலிமையையும் தாங்க முடியாமல் பூமாதேவி நிலை குலைந்தாள்.
நாட்கள் நீண்டன. ஆனால் பரமசிவனின் அருள் பார்வை முனிவர்களின் மேல் விழவே இல்லை.
யாகத் தீ மேல் நோக்கி உயர எழும் ஒவ்வொரு நிமிடமும் பூமாதேவி துவண்டு போனாள்.
பூமாதேவி பிரம்மதேவனிடம் தனது நிலையை விளக்கி முறையிட்டாள்.
பிரம்மா மற்ற தேவர்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு கைலாய மலை சென்றார்.
சிவனிடம் பூமாதேவியின் குறையை விளக்கி அருள் புரியுமாறு வேண்டி நின்றார்.
பிரச்னையைக் கருணையுடன் கேட்ட மகேசன், பால்ய ஆதித்தர்கள் மிகவும் கர்வம் கொண்டவர்கள் என்றும், அவர்களது ஆணவம் அடங்கினால்தான் அவர்களுக்குத் தமது தரிசனம் கிடைக்குமென்றும், அதற்கு வேண்டியதைத் தாம் செய்யப் போவதாகவும் கூறி அருளினார்.
பரமசிவன் ஒரு வயோதிக வழிப்போக்கரின் உருவத்தை ஏற்று பால்ய ஆதித்தர்களின் யாக சாலையை நோக்கி விரைந்தார்.
அங்கே ஒரே அமளி துமளி. முனிவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாத குறைதான். தங்களுக்குள் யார் பெரியவர்? என்ற சர்ச்சையில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
வயோதிகரைக் கண்டவுடன் தங்கள் சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு அவரிடம் விண்ணப்பித்தார்கள்.
எல்லாம் அறிந்த கிழவரல்லவா அவர்! புன்முறுவலுடன் அவர்களிடம், ‘நீங்கள் யாருமே பெரியவர்கள் இல்லை. எல்லோருமே சிறியவர்கள்தான்!’ என்று அவர் கூறினார்.
அவ்வளவுதான், முனிவர்களின் கோபத் தீ இப்போது வயோதிகர்மீது திரும்பியது.
உடனே அந்த வயோதிகரது உடலே ஒரு தீயாக மாறி, மலை போன்று வளர்ந்தது. அந்த அக்னி மலையின் மேல் பாகத்தில் சிவனின் மூன்று கண்கள் மட்டும் தெரிந்தன. அந்தக் கண்கள் அக்னியை விட அதிகமாகப் பிரகாசித்தன.
அதைக் கண்ட பின்தான் முனிவர்களுக்குக் கிழவராக வந்திருப்பது யார் என்பது புரிந்தது.
தங்களைச் சோதிக்க வந்த மகேசனை வணங்கி மன்னித்தருளுமாறு அவர்கள் வேண்டினார்கள். சிவனும் அவர்களை மன்னித்து அருள்பாலித்தார்.
பிறகு, முனிசிரேஷ்டர்களே, “என்னை எடுத்து அந்த மலையின் மேல் கொண்டு சென்று வையுங்கள்" என்று அசரீரி மூலம் கட்டளையிட்டார்.
இறைவனது கட்டளையை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்கள் திகைத்தார்கள்.
முக்கண்கள் கொண்ட அந்த மலை போன்ற உருவத்தை எடுத்துச் செல்லும் பலம் பெற்றவரை அவர்கள் ஈரேழு உலகங்களிலும் தேடி அலைந்தார்கள்.
கடைசியில் அவர்களது பிரச்னைக்கு முடிவு சொன்னவர் யார் தெரியுமா? நாரதர்தான்!
நாரதரின் அறிவுரைப்படி விநாயகரைத் தியானம் செய்து தங்களுக்கு உதவுமாறு முனிவர்கள் வேண்டினார்கள்.
விநாயகர் அந்த மலை போன்ற உருவத்தை மூன்று முறை வலம் வந்தார். தலை வணங்கினார். தமது துதிக்கையால் ஒரு பூவை எடுப்பது போல், பரமசிவனின் அக்னித் திருவுருவத்தைத் தூக்கி எடுத்தார். மலைச் சிகரத்தில் வைத்துப் பிரதிஷ்டை செய்தார். பிறகு விதிப்படி பூஜை செய்தார். அதனால் பரமசிவன் மகிழ்ந்து பால்ய ஆதித்தர்களை ஆசிர்வதித்தார்.
ஆணவம் அடங்கிய அந்த முனிவர்களும் பரமசிவனின் துதி பாடி வரம் பெற்றனர்.
தமது அந்த மலை போன்ற முக்கண்கள் கொண்ட உருவத்தை யார் பக்தியுடன் வணங்குகிறார்களோ, அவர்களுக்குத் தம் அருள் கிடைக்கும் என்று இறைவன் ஆசிர்வதித்தார்.
இன்று நாம் பூஜித்து வணங்கும் சிவலிங்கம் அந்த உருவத்தின் மறு உருவம்தான்.
அன்று முதல் கேரளாவில் உள்ள சிவாலயங்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் யானை ஒன்று கோயிலை வலம் வந்து பரமசிவனைத் துயிலெழுப்பும் வழக்கம் ஏற்பட்டதாம். விநாயகர் செய்த செயலை நினைவூட்டும் வகையில் இந்த வழக்கம் ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது.