சூரியனை 'சப்தாச்வரத மாரூடம்' என்ற நாமத்தால் துதிப்பது வழக்கம். 'ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் மேல் சூரிய பகவான் பவனி வருவான்' என்பது வர்ணனை.
இந்த வர்ணனையில் உள்ள அழகை ஆராய்வோம்: 'ரம்ஹண சீலத்வாத் ரத:' – நகரும் லட்சணம் கொண்டது ரதம். பாய்வது ஒளியின் குணம். ஒளிக்கு மூலமானவன் பிரபாகரன். அச்வம் என்றால் ஒளிக்கதிர் என்று பொருள்.
அஸு வ்யாப்தௌ... விரைவாகச் செல்லும் குணம் கொண்டது அஸ்வம். இதுவும் ஒளியின் குணமே. எனவேதான் சூரிய கிரணங்களைக் குதிரைகள் என்று குறிப்பிட்டார்கள்.
ஏகோ அஸ்வோ வஹதி சப்த நாமா... 'ஒரே குதிரையே ஏழு என்றழைக்கப்படுகிறது' என்று வேதமந்திரம் கூறுகிறது.
இதனை நாம் கவனித்துப் பார்த்தால், நம் சாஸ்திரங்களின் ஆதாரத்தோடு அனேக கருத்துக்களை அறிய முடியும்.
1. ஒரே சூரிய காந்தி (ஒளி) எந்த வித வர்ண வேறுபாடும் இல்லாத சுத்த வர்ணத்தில் இருக்குமென்றும், அதுவே வெவ்வேறு மாறுதல்களால் ஏழு நிறங்களாக பிரிக்கப்படுகிறதென்றும் அனைவரும் அறிந்ததே. இந்த ஏழு நிறங்களே ஏழு குதிரைகள்! இது நிறங்களோடு கூடிய சூரிய ஒளியின் ஸ்வரூபம்.
2. சூரிய உதயத்தை அனுசரித்து தினங்களைக் கணக்கிடுகிறோம். பகலுக்குக் காரணமானவர் திவாகரன். இப்படிப்பட்ட உதயங்களால்தான் கிழமைகள் ஏற்படுகின்றன. கிழமைகள் ஏழு. கால உருவமான ஆதித்தியன் ஏழு நாட்களையே ஏழு குதிரைகளாகக் கொண்டு வலம் வருகிறான்.
3. புராணங்களின்படி சூரியனின் ஏழு குதிரைகளின் பெயர்கள்: ஜய, அஜய, விஜய, ஜிதப்ராண, ஜிதஸ்ம, மனோஜவ, ஜிதக்ரோத. – (ஆதாரம் பவிஷ்ய புராணம்). ஒளி பரவுவதில் உள்ள பல வித நிலைகளே, சக்தியின் தன்மையிலுள்ள வித்தியாசங்களே இப்பெயர்கள்.
4. வேதஸ்வரூபனாக 'ருக்யஜுஸ்ஸாம பாரக:' என்று பானுவை நம் தர்மம் கருதுகிறது. ஹனுமானும், யாக்ஞவல்கியரும் சூரியனை வழிபட்டு வேத ஞானத்தை அடைந்தார்கள். வேதத்திலுள்ள முக்கிய சந்தஸுகள் ஏழு: – காயத்ரி, த்ரிஷ்டுப், அனுஷ்டுப், ஜகதீ, உஷ்ணிக், பங்க்தீ, ப்ருஹதீ.
5. சூரியனிலுள்ள சுஷும்னா என்ற கிரணசக்தி சந்திரகிரகம் உருவாகக் காரணம். அதேபோல் செவ்வாய் கிரகத்திற்கு 'சம்பத்வசு' (மற்றொரு பெயர் – உதன்வசு) என்ற பெயர் கொண்ட சூரிய கிரணம் காரணம். 'விஸ்வ கர்மா புத கிரகத்திற்கும், 'உதாவசு' பிருஹஸ்பதிக்கும், 'விஸ்வ வ்யச்சஸு' சுக்ர கிரகத்திற்கும், 'சுராட்' சனிக்கும், 'ஹரிகேச' சகல நட்சத்திரங்களின் ஒளி பரவுதலுக்கும் காரணங்கள். ஏழு குதிரைகளாக உருவகப்படுத்தப்பட்ட கிரண சக்திகள் மூலம் விஸ்வரத சக்கரத்தை நடத்தும் நாராயணனே எல்லா கிரகமாகவும் இருப்பவன்.
6. நம் உடலில் தோல், எலும்பு, சதை, மஜ்ஜை, ரக்தம், மேதஸ், சுக்ரம்... என்ற ஏழு தாதுக்கள் உள்ளன. இவற்றோடு சஞ்சரிக்கும் ரதமே இந்த தேகம். இவற்றை இயக்கும் அந்தர்யாமி வடிவான சைதன்யமே ஆதித்தியனாகிய பரமாத்மா.
7. நம் முகத்தில் கண்கள் இரண்டு, நாசி துவாரங்களிரண்டு, காதுகளிரண்டு, வாய் ஒன்று, இந்த ஏழு ஞானேந்திரியங்களை வழி நடத்தும் புத்தி ரூபமான சைதன்யம் இவனே!
8. மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை நகரும் குண்டலினீ ஸ்வரூபமே அர்க்கன். இந்த மார்கத்திலுள் ஏழு சக்கரங்களின் ஸ்தானங்களே ஏழு குதிரைகள். இந்த ஏழு குதிரைகளோடு பயணிக்கும் சூரிய ஒளியின் விஸ்தரிப்பையே ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் சலனமாக வேத சாஸ்திரங்கள் போற்றுகின்றன. ஒவ்வொரு தெய்வத்தின் உருவமும் ஒவ்வொரு தத்துவத்தின் அடையாளம்.
வேதங்கள் புகழும் சூரிய சக்திக்கு சகுண உருவமே ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் ஹிரண்மய ஸ்வரூபம்.
ஜகத்தினை மலரச் செய்து, துயிலெழுப்பி, நகரும் சக்தியே 'பத்மினி'. ரோக நிவாரண விடியற்காலை சக்தியே 'உஷாதேவி'. சூரிய ஒளியினால் தான் பொருட்களை அடையாளம் கண்டு கொள்கிறோம். அதுவே 'சம்ஞா சக்தி', வெளிச்சமிருந்தால் தான் நிழலுக்கு இருப்பு, நிழலைத் தரும் வெளிச்சமே 'சாயாதேவி'.
இந்நான்கும் சூரியனின் ஒரே கிரணத்தின் வெவ்வேறு சொரூபங்கள். சூரியனை விட்டுப் பிரியாத சக்திகள். இவற்றையே சங்கேதமாக சூரியனின் மனைவிகள் என்கிறோம்.
இவ்விதம் எத்தனையோ சிறப்புகள் பொருந்திய 'சப்த அஸ்வ ரத'த்தில் அமர்ந்தவரான சூரிய பகவான் நமக்கு அருள் பாலிப்பாராக!