சிவபெருமானின் அடையாளங்களுள் ருத்ராட்சம், திருநீறு, பஞ்சாட்சரம் தவிர வில்வமும் ஒன்று. அபிஷேகப்பிரியரான சிவனுக்கு வில்வார்ச்சனை மிகவும் பிடித்தமானது. சிவ பூஜைக்கு வில்வமே முதன்மையானது. ஒரு வில்வதளம் பல ஸ்வர்ணபுஷ்பங்களுக்குச் சமம்.
'த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரயாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்'.
மூவிலைகளைக் கொண்டதும், முக்குணங்களைக் குறிப்பதும், முக்கண்களைக் குறிப்பதும், திரிசூலத்தைக் குறிப்பதும், மூன்று ஜென்ம பாவங்களை எரிப்பதுமாகிய வில்வதளத்தைச் சிவனுக்கு அர்ப்பணித்துப் பலன் பெறலாம்.
சிவபெருமானைத் துதித்து ஒரு வில்வ தளத்தைச் சமர்ப்பித்தாலும், மஹாபாவங்கள் விலகி, நன்மைகள் ஏற்படும். வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள், சிவாலயம் சென்று வில்வத்தால் வழிபட்டால் நல்ல பலனை அடையலாம்.
வில்வ, துளஸீ, நாயுருவி, வன்னி, நெல்லி, நீர்முள்ளி, விலா, அருகு எனும் அஷ்ட வில்வங்களில் முதலிடம் வகிப்பது வில்வம்தான்.
வில்வ ஸமித்தால் ஹோமம் செய்தால் செல்வத்தையடையலாம். வில்வ மரத்தினடியில் ஜபம் செய்தல் நன்று. வில்வமர பிரதட்சணம் பெரும் புண்ணியம்.
மாதப் பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் வில்வம் பறித்தல் தகாது. முதல் நாளேப் பறித்து வைத்துக் கொள்ளலாம்.
வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது பெரும் புண்ணியம். வில்வ மரத்தில் கால் படக்கூடாது. வில்வ மரத்தை வெட்டுவது பாவம்.
வில்வ மரத்தின் வேர், பட்டை, இலை, பழம் முதலியவை நோய் தீர்க்கும் மருந்தாகும். சீதபேதி, குடற் புண், ரத்தக்கொதிப்பு, ரத்தசோகை முதலிய வியாதிகளுக்கு வில்வ இலை குணம் தரும். வில்வ இலையின் சாறு காய்ச்சலுக்கு மருந்து. வேரையும் பட்டையையும் கஷாயம் செய்து முறைக் காய்ச்சலுக்குக் கொடுப்பார்கள்.
வில்வப் பழம் செரிமான சக்தியை வளர்க்கும். பத்து வேர்களினால் செய்யப்படும் 'தச மூலாரிஷ்டம்' என்கிற மருந்தில் வில்வ வேரும் ஒன்று. சில கண் நோய்களுக்கு வில்வ இலைகளால் கண்களின் மேல் பற்றுப் போடுவதுண்டு.
'வில்வாதி லேகியம்' வயிற்றுக் கோளாறுகளுக்குச் சிறந்த ஒளடதம். தொழில் முறையில் வில்வப் பழம் வர்ணம் தீட்டுவதற்கும், தோலைப் பதனிடுவதற்கும் உதவுகிறது.
வில்வ தளத்தின் மகிமையைக் கூறும் ஒரு கர்ணபரம்பரைக் கதை அனைவரும் அறிந்ததே.
வேடன் ஒருவன் சிவராத்திரியில் புலிக்குப் பயந்து வில்வ மரத்தில் உட்கார்ந்து வில்வத்தைப் பறித்து இரவு முழுவதும் கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவை கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. சிவராத்திரியன்று பூஜை செய்த பலனாக அவனுக்கு சிவதரிசனமும் மறுபிறவி இல்லாத நிலையும் கிடைத்தன.
வில்வ மரத்திலும், வில்வ தளத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். வில்வப் பழத்திற்கு 'ஸ்ரீபலம்' என்ற பெயருண்டு. வில்வப்பழம் திருவின் பாலால் வளர்ந்தது. அது சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதென்றும் கூறப்படுகிறது.
'பிருகத் கர்ம' புராணத்தில் லட்சுமிதேவி கயிலாயத்தில் சிவபெருமானுக்குத் தன் அங்கமொன்றை வெட்டி, அளித்து சிவனின் அருளைப் பெற்றதாகவும், லட்சுமிக்கு ஏற்பட்ட குறையை நீக்கி, அவ்வங்கம் பூமியில் ஒரு மரமாக வளருமென்றும் அவள் பெயரைப் பெற்று 'ஸ்ரீவிருக்ஷம்' என விளங்குமென்றும் அதன் இலைகளினாலேயே தன்னை அர்ச்சிக்க வேண்டுமென்றும் சிவபெருமான் கூறியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
'வில்வ தளத்தில் மேல் நோக்கியுள்ள இதழ் சிவன், வலப்புற இதழ் திருமால், இடப்புற இதழ் பிரும்ம தேவன்' என்று திருமால் லட்சுமிக்குக் கூறியதாகப் புராண வரலாறு. மார்கழி மாதத்தில் திருப்பதியில் ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு வில்வ தளத்தால் அர்ச்சனை உண்டு. வில்வ இலை, 'பில்வ பத்ரம்' என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்படுகிறது.
ஆயிரம் எருக்கம்பூக்களால் பூஜித்தால் எவ்வளவு பலன் கிடைக்குமோ, அந்தப் பலன் அரளி புஷ்பத்தினால் பூஜை செய்தால் கிடைக்கும். அரளிப் புஷ்பம் வெண்மை நிறமாக இருந்தாலும், வேறு நிறமாக இருந்தாலும், அந்தப் புஷ்பத்தின் உட்பகுதியில் பீடத்துடன் கூடிய சிவலிங்கத்தின் உருவம் அமைந்திருப்பதால் மிகச் சிறப்பு வாய்ந்தது.
அப்பேர்ப்பட்ட 1000 புஷ்பங்களுக்குச் சமமான பலனைக் கொடுக்கவல்லது மூன்று தளங்களைக் கொண்ட ஒரு வில்வத்தினால் அர்ச்சனை செய்வது.
வில்வ இலையின் மூன்று தளங்களிலும் இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி, ஆகிய மூவரும் அதி தேவதைகளாக இருக்கிறார்கள். இவ்வளவு மகிமை வாய்ந்த வில்வ இலை உலர்ந்து போனாலும், ஏற்கனவே பூஜை செய்யப்பட்ட நிர்மால்யமாக இருந்தாலும், பூஜை செய்வதற்குத் தகுதியுடையது.
சிவபெருமானை வில்வ இலைகளைக் கொண்டு பூஜித்தால் அனைத்துப் பாவங்களும் நீங்கிக் கடைசியில் சிவலோகத்தை அடைவார்கள்.
வில்வ விருட்சமும், வில்வ தளமும், வில்வப் பழமும் தெய்வீகத் தன்மை பொருந்தியவை என்பதற்கும், அவைகள் மகாலக்ஷ்மியின் வாசஸ்தலங்கள் என்பதற்கும் சான்றாக, ஸ்ரீஸூக்தம்,
'மஹாலக்ஷ்மியே! உன் வாசஸ்தலமாயிருக்கிற வில்வ மரம் விருட்சங்களுக்குத் தலைமை வகிக்கிறது; அது பரம மங்களகரமானது. உன்னுடைய விளையாட்டின் பொருட்டு, உன் நாதனான விஷ்ணுவால் ஆதித்யனோடு கூடவே தோற்றுவிக்கப்பட்டது; அதனுடைய பழங்களைக் கொண்டு நான் செய்யும் வேள்வி, அதைக் காண்பது, தொடுவது, நினைப்பது, துதிப்பது முதலான தவங்களாலே என் பாவங்கள் நீக்கப்படட்டும். அம்மரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளையும் அகற்றட்டும்’ என்று குறிப்பிடுகிறது.