கீழேயிருக்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
1. துணையுடையவன் என்று எவனைச் சொல்லலாம்?
2. எவனை இறந்தவன் என்று சொல்லலாம்?
3. தீராத வியாதி எது?
4. எவன் துறவி?
5. எவன் துறவியில்லை?
6. இன்பமாகப் பேசுகிறவனுக்கு என்ன கிடைக்கும்?
7. ஆராய்ந்து செயல்படுபவனுக்கு என்ன கிடைக்கும்?
8. எவனை இன்பமாக வாழ்கிறான் என்று சொல்லலாம்?
9. உலகில் ஆச்சரியமான விசயம் எது?
10. எல்லோரையும் விட மிகப்பெரிய பணக்காரன் யார்?
11. பூமியை விடக் கனமானது எது?
12. ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
13. காற்றை விட வேகமாகச் செல்வது எது?
14. எதை விட்டொழித்தால் மனிதன் எல்லோருக்கும் பிடித்தவன் ஆகிறான்?
15. எதை விட்டொழித்தால் மனிதன் சோகமே அடைவதில்லை...?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தயார் செய்து விட்டீர்களா...?
உங்களைப் போன்று ஒருவர் மேற்காணும் கேள்விகளுக்குச் சொன்ன பதில்கள் கீழே...
1. எவனுக்கு மன உறுதி இருக்கிறதோ அவன் துணை உடையவன்.
2. தரித்திரனை இறந்தவன் என்று சொல்லலாம்.
3. பேராசைதான் தீராத வியாதி.
4. எவன் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்கிறானோ அவன் துறவி.
5. இரக்கமில்லாதவன் துறவியல்ல.
6. இன்பமாகப் பேசுபவன் அனைவருக்கும் பிடித்தவன் ஆகிறான்.
7. வெற்றி கிடைக்கும்.
8. எவனுக்குக் கடனில்லையோ, எவன் சொந்த நாட்டில் வசிக்கிறானோ அவனே இன்பமாக வாழ்கிறவன்.
9. உலகில் பிறந்த மக்கள் தினமும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும், தான் நிரந்தரமாக இங்கு இருக்கப் போவதாக மனிதன் எண்ணிக் கொண்டிருப்பதே ஆச்சரியம்.
10. எவன் எதனாலும் பாதிக்கப்படாமல், சாந்தமாகவும், முகமலர்ச்சியுடனும் இருக்கிறானோ, அவன்தான் அனைவரையும் விடப் பணக்காரன்.
11. பூமியை விடக் கனமானது அன்னையின் கௌரவம்.
12. ஆகாயத்தை விட உயர்ந்தவர் தந்தை.
13. மனம் காற்றை விட இலேசானது.
14. கர்வத்தை விட்ட மனிதன் அனைவருக்கும் பிடித்தவன் ஆகிறான்.
15. ஆசையை விட்டால் மனிதன் சோகமே அடைவதில்லை.
நமக்கு நீதி போதிப்பதற்காக மேலே காணும் கேள்விகள் அனைத்தும் யட்சன் உருவில் தருமதேவன் கேட்ட கேள்விகள். பதில்கள் அனைத்தும் தருமபுத்திரர் சொன்னவையாக மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது.