தெய்வத் திருவுருவங்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டி, பாடி மகிழும் வழக்கம் பல கோயில்களில் நெடுங்காலமாக இருந்து வருகிறது.
இதை ஒரு விழாவாகவேக் கொண்டாடுவார்கள்.
இதற்கு ஒரு தத்துவமே உண்டு; தனிப் பாடல்களும் உண்டு.
இந்தப் பரந்த உலகம், பெரிய ஒரு பந்தலைப் போன்றது; இதில் பிறவி என்னும் ஊஞ்சலில் பலகையைப் போன்றவர்கள் மக்கள்; இவர்களுடைய இந்திரியங்கள் (ஐம்புலன்கள்) ஊஞ்சலைப் பிணைக்கும் சங்கிலிகள் போன்றவை; சங்கிலிகளை மாட்டும் விட்டம்தான் மக்களின் அறிவு; உலக மாயையில் மக்கள் கொண்டிருக்கும் பற்றும் பாசமும்தான் விட்டத்தைத் தாங்கும் தூண்கள்; பிறவிகளில் மக்கள் சம்பாதிக்கும் நல்வினை - தீவினைகள்தான் ஊஞ்சலை முன்னும் பின்னும் செல்லும்படி ஆட்டுபவர்கள்; வினைப்பயன்களுக்கேற்ப நரகத்தை அடைவது இறக்கம்; சொர்க்கத்தை அடைவது ஏற்றம் இவ்வாறு ஏற்ற இறக்கத்தால் தடுமாறும் ஆன்மாக்கள் ஊசலாட்டம் நீங்கி பிறவாத நிலை என்னும் உயர்பதவியாகிய முக்தியை அடைய வேண்டிப் பாடிக் கொண்டாடுவதே ஊஞ்சல் உற்சவம்.
இந்த உண்மையை விளக்கும் ஒரு தனிப் பாடல் இதுதான்;
“அண்டப்பந்தலில் பற்றுக் கால்களாக
அறிவு விட்டம் கரணம் சங்கிலிகளாக
கொண்டபிறப்பே பலகை வினையசைப்போர்
கொடுநரக சுவர்க்கப்பூ வெளிகள் தம்மில்
தண்டலில் ஏற்றம் இறக்கம் தங்கலாகத்
தடுமாறியிட ருழக்கும் ஊசல்மாற.”
பக்தர்களின் ஆன்மிக வளர்ச்சிக்கு ஊஞ்சல் உற்சவம் துணைபுரியும் பாங்கை இந்தப் பாடல் எடுத்துக்காட்டுகிறது.