லட்சுமி பூஜை என்பது தாயார் மகாலட்சுமியை இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். மாலை வேளையில் செய்யப்படும் இந்த வழிபாட்டுப் பூஜை , ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளின் பிரதோச வேளையில் செய்யப்படுகிறது. பூஜைக்கான நேரம் அமாவாசை திதியை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. சூரியன் துலா மாதத்தில் சஞ்சரிக்கும் வேளையில் சந்திரனைச் சந்திக்கும் அமாவாசை நாளில் லட்சுமியை ஆராதனை செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறது. ஐப்பசி துலா மாதம் எனப்படுகிறது. துலாம் என்பது சமத்தைக் குறிக்கும். வணிகர்களுக்கு வரவ செலவு சமமாக இருக்க வேண்டும் என்று அன்னையை வேண்டி இந்நாளில் பூஜை செய்வர். வட இந்தியாவில் இந்நாளில் வியாபாரிகள் பழைய கணக்குகளை முடித்துவிட்டுப் புதிய கணக்குகளைத் தொடங்குவர்.
சூரியன் துலா அமாவாசை நாளில் தன்னுடைய இரண்டாவது சஞ்சரத்தைத் துவங்குவதாக நம்பப்படுகிறது. சாதாரணமாக, அமாவாசை நாள் நல்ல நாளாகக் கருதப்படுவது இல்லை. ஆனால் லட்சுமி பூஜை வருவதாலும், சூரியன் தன் சஞ்சாரத்தை மாற்றுவதலும், இந்நாள் சுப நாளாகக் கருதப்படுகிறது .மகாராஷ்டிரம், குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்களில் லட்சுமி பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வணிக வளாகங்கள் போன்ற வியாபாரத் தலங்களில் லட்சுமி பூஜையைக் கட்டாயம் செய்வர். மேலும், இந்நாளேத் தீபாவளியாகக் கொண்டடாடப்படுகிறது
இந்த நாளில் அன்னை பூமியில் இருக்கும் இடங்களில் வருவதாகத் தொன்ம நம்பிக்கை. அவளுக்கு வழிகாட்டும் வகையில் வீடுகளில் விளக்கு ஏற்றி வைப்பர். அன்னை வருவாள் என்ற நம்பிக்கையில் இரவு முழுவதும் விளக்கு ஏற்றுவர். சில இடங்ளில் இரவு சொக்கட்டான் ஆடுவர்.
பூஜை செய்யும் முறை:
ஒரு மேடையில் சிவப்புத் துணி விரித்து, கலசத்தை நிறுத்த வேண்டும் .கலசத்தின் விளிம்புப் பகுதியில் நான்கு மா இலைகளை வைத்துத் தண்ணீர் நிரப்பி வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். பூஜை செய்பவர் தன்னுடைய கணக்குப் புத்தகங்களை வைத்து இருக்க வேண்டும். மேடையில் லட்சுமி தேவி சிலை, விநாயகர் சிலை என்று இரு சிலைகளையும் வைக்க வேண்டும். பிளையார் பூஜை செய்த பின், இலட்சுமி தேவியை ஆராதிக்க வேண்டும். இலட்சுமி தேவியை பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிசேகம் செய்ய வேண்டும். பின்னர், இனிப்புகள் ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும். பூஜையின் போது ஸ்ரீசூக்தம், இலட்சுமி அஷ்டகம், வேத மந்திரங்கள் ஆகியவற்றைச் செபிக்கலாம். பின்னர் ஒரு தட்டில் ஆரத்தி எடுத்து, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். வடக்கே இப்பூஜை மிகப் பிரபலம். குஜராத் மாநிலத்தில் இதை ‘சோப்டா பூஜை’ என்பர். இவ்வாறு எளிய பூஜையால் அன்னை மகிழ்ந்து நாம் வேண்டியதைத் தருவாள் என்பது நம்பிக்கை.