இராமாயணக் கதாப்பாத்திரங்களில் ஒன்றான அனுமன் பிறந்தநாளை, ‘அனுமன் ஜெயந்தி' என்று கொண்டாடுகின்றனர். வால்மீகி ராமாயணத்தின் படி, அனுமன் அவதரித்தது மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் என சொல்லப்படுவதால் அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். அதே வேளையில், புராண கதைகளின்படி, சித்ரா பெளர்ணமி நாளில்தான் அனுமன் அவதரித்ததாக சொல்லப்படுவதால், அந்த நாளையும் அனுமன் ஜெயந்தியாக கருத்தில் கொண்டு பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும், மூலநட்சத்திரமும் கூடி வரும் நாளன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், பிற மாநிலங்களில் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அனுமன் பலரின் இஷ்ட தெய்வமாக வணங்கப்படக் கூடியவர். கவலைகள், கஷ்டங்கள், பயம், நெருக்கடி, எதிரிகள் தொல்லை, கிரக தோஷங்கள் ஆகியவற்றில் இருந்து பக்தர்களைக் காக்கக் கூடியவர். அனைத்துப் பெருமாள் கோவில்கள், ராமர் கோவில்களிலும் அனுமனுக்கு நிச்சயமாகத் தனி சன்னதி இருக்கும். பல இடங்களில் அனுமனை முதன்மைத் தெய்வமாக கொண்ட கோவில்களும் உள்ளன. அனுமனுக்குத் துளசி, வெற்றிலை, வடைமாலை சாற்றி வழிபட்டால் வேண்டுதல் எதுவாக இருந்தாலும், அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் நோன்பிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபட்ட்டால், அவர்கள் வேண்டிய பலன்களை அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.