பிள்ளையாரின் திருவுருவம் பல தத்துவக் கருத்துக்களைக் கொண்டு விளங்குகிறது. அவற்றுள் சில;
1. பிள்ளையாரின் இரண்டு திருவடிகளும் முறையே அவருடைய ஞானம், கிரியை என்ற சக்திகளை உணர்த்தும்.
2. மிகப் பெரிய யானையின் முகமுள்ள பிள்ளையார், மிகச் சிறிய பெருச்சாளியை வாகனமாகக் கொண்டிருக்கிறார். இது அவரே எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஆதேயமாகவும் (தாங்குபவராகவும், தாங்கப் பெறுபவராகவும்) விளங்குகிறார் என்பதைக் காட்டும்.
பெருச்சாளி இருளை விரும்பும், கேடு விளைவிக்கும். ஆதலால் அது அறியாமை அல்லது ஆணவமலத்தைக் குறிக்கிறது. எனவே, பெருச்சாளியைப் பிள்ளையார் தமது காலின் கீழ் கொண்டிருப்பது, அவர் அறியாமையையும் செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதைப் புலப்படுத்தும்.
3. இளமைப் பருவம் மிக்க பிள்ளைகளே, தம் கால்களால் “குறுகுறு நடந்து சிறு கை நீட்டி'' விளையாடுவார்கள். ஆதலின், பிள்ளையாரின் குறுந்தாள்கள், அவரது என்றும் மாறாத நித்திய இளமைத்தன்மையை உணர்த்துகின்றன.
4. பிள்ளையார் தம் தந்தையாகிய சிவபெருமானைப் போல, மூன்று கண்களை உடையவர். அவை முறையே சூரியன், சந்திரன், அக்கினி என்பவர்களைச் சுட்டும்.
5. பிள்ளையாரின் நீண்ட துதிக்கை, வேண்டுவோர் வேண்டுவன எல்லாம் தருகிற அவரது வள்ளன்மையை உணர்த்தும். ''தரு கை நீண்ட தயரதன்” என்னும் கம்பர் பாடலால் இந்தக் கருத்தை உணரலாம்.
நீண்ட கையினர் (ஆஜானுபாகு) ஆக இருத்தல், ஆண்டகைமைக்குரிய அரிய இலக்கணம் ஆகும். சாமுத்திரிகா லட்சணத்தில் நீண்ட கையைப் பெற்றிருப்பது மிகவும் விசேஷம் என்று சொல்லப் பெற்றிருக்கிறது. அண்மைக் காலத்தில் வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், மகாத்மா காந்தி ஆகியோர் நீண்ட கைகளை உடையவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6. பிள்ளையாரின் யானைமுகம், அவரே பிரணவப் பொருளாகத் திகழ்வதை அறிவிக்கும். “பிரணவப் பொருளாம் பெருந்தகை, ஐங்கரன்'' என்பது வெற்றிவேற்கை.
7. பிள்ளையாரின் ஐந்து கைகளும், அவர் புரியும் ஐந்தொழில்களை அறிவிக்கும்.
கும்பம் ஏந்திய கை, படைத்தல்; மோதகம் தாங்கிய கை, காத்தல்; அங்குசம் உள்ள கை, அழித்தல்; பாசம் பற்றிய கை, மறைத்தல்; தந்தம் வைத்த கை, அருளல் ஆகிய தொழில்களைப் புரிகின்றன. இனி, இவையே திருவைந்தெழுத்து மந்திர நிலையை உணர்த்துவதாகவும் பெரியோர் கூறுவர்.
அங்குசம் தாங்கிய வலக்கை, சிகரம். பாசம் பற்றி இடக்கை, வகரம். தந்தம் ஏந்திய வலக்கை, யகரம். மோதகம் உள்ள இடக்கை நகரம். துதிக்கை, மகரம். இங்ஙனம் சிவாய நம என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தின் நிலையைப் பிள்ளையாரின் ஐந்து திருக்கைகள் உணர்த்துவது நாம் ஊன்றியுணரத்தக்கது.
8. பிள்ளையார் ஆகிய கடவுள், மனிதர் தேவர் விலங்கு முதலிய அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிபவர். ஆதலின் அவர் திருவுருவத்தில் இடைக்குக் கீழ் மனிதக் கூறும், இடைக்கு மேல் கழுத்து வரை தேவக் கூறும், அதற்கு மேல் விலங்குக் கூறும் அமைந்து காணப்படுகின்றன.
அறிவிலும் பண்பிலும் உயர்ந்தால் விலங்குகளும் உயர்வாக மதிக்கப்பெறும்; அவற்றில் தாழ்ந்தால் தேவரும் மனிதரும் கூட, இழிந்தவர்களாக இகழப்படுவர் என்னும் தத்துவமும், பிள்ளையாரின் திருவுருவில் விலங்கின் கூறாகிய யானைமுகம், ஏனைய உறுப்புகளுக்கு மேலே அமைந்திருப்பதனால் அறியப்பெறும்.
9. கடவுள் ஆண் பெண் அலி என்னும் நிலைகளைக் கடந்தவர். இதனைப் பிள்ளையாரின் ஒற்றைக் கொம்புள்ள யானை முகம் உணர்த்துகிறது. ஆண் என்றால், இரு கொம்புகள் வேண்டும். பெண் என்றால், கொம்பு இல்லாமல் இருத்தல் வேண்டும். அலி என்றால், மதம் இல்லாமல் இருத்தல் வேண்டும். பிள்ளையார் ஒரு வகையில் ஆண் பெண் அலி என்னும் நிலையினராகவும் அவை இல்லாதவராகவும் விளங்குகிறார்.
10. பிள்ளையாரின் பேழைவயிறு, அவருடைய எல்லையற்ற ஆனந்தம், எல்லையற்ற ஆற்றல், சர்வவியாபகத்துவம் ஆகியவற்றைக் குறிக்கும். எல்லா உலகங்களையும் உயிர்களையும் தம்முள் அடக்கிக் கொண்டு, அருளுடன் பாதுகாத்து வருவதைப் பிள்ளையாரின் பெருவயிறு புலப்படுத்துகிறது.
11. பிள்ளையாரின் விரிந்து நீண்ட பெரிய காதுகள், தம் அடியவர்கள் எங்கிருந்து எப்பொழுது நினைத்துத் தம்முடைய குறைகளை முறையிட்டுக் கொண்டாலும், அவற்றையெல்லாம் ஏற்றுக் கேட்டுப் பரிவுடன் அருள்புரிந்து நலம் புரியும் இயல்பினர் என்பதை உணர்த்துகின்றன.
12. யானையாக விளங்கும் பிள்ளையாரே, யானையை அடக்கியாளும் கருவிகள் ஆகிய அங்குசம் பாசம் ஆகிய இரண்டு கருவிகளையும், தம்முடைய இரு கைகளில் வைத்துக்கொண்டிருப்பதனால் பிள்ளையாரே எல்லோருக்கும் தலைவர், அவருக்கும் மேலாகத் தலைவர் எவரும் இல்லை என்பது விளங்கும்.
மேலும், உயிர்களையெல்லாம் பற்றி அலைக்கழித்து வருகிற ஆணவ மலம் என்னும் கொடிய மதயானையை அடக்கியழித்து, உயிர்களைக் காக்க வல்லவர் பிள்ளையாரே என்ற உண்மையையும், அவர் ஏந்தியுள்ள அங்குச பாசங்கள் குறிக்கின்றன.