நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்துச் செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையினைக் கொலு என்கின்றனர். கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு எனும் வழிபாட்டு முறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் நடைபெறுகிறது. இப்பண்டிகை பொதுவாக, தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை நாளை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்து சமயத்தில் சக்தியின் வழிபாடாகக் கருதப்படுகிறது.
பொம்மைகளை வைத்து வழிபடும் இந்த வழிபாடு, தமிழ் மொழியில் "தெய்வீக இருப்பு" என்ற பொருளிலும், தெலுங்கில் ‘பொம்மைகளின் கோட்டை’ என்ற பொருளிலான ‘பொம்மல கொலுவு’ என்றும், கன்னட மொழியில் ‘பொம்மைத் திருவிழா என்ற பொருளிலான் பொம்பெ ஹப்பா என்றும் வழங்கப்படுகிறது.
கொலு வைப்பதற்கு முன்பு வீட்டைச் சுத்தம் செய்து, ஒற்றைப்படையில் அதாவது, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் வைத்து கொலு வைக்கப்படும். இந்தப் படிகளில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும். மேற்படியில் ஆரம்பித்து கீழ்ப்படி வரை பொம்மைகள் கலைநயத்துடன் கதை சொல்லும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
கொலுவில் கடவுள் சிலைகளுடன், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சித்தரிக்கும் பொம்மைகளும் இதில் இடம் பெறுகின்றன. இந்து சமயப் புராணங்களைச் சித்தரிக்கும் பொம்மைகள், தேரோட்டம், கடவுளர்களின் ஊர்வலம், அணிவகுப்பு, திருமண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பொம்மைகள், சிறிய அளவிலான சமையலறை சொப்பு சாமான்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் பறவைகள் பொம்மைகளும் இடம் பெறுகின்றன.
இதேப் போன்று, கொலுவில் மரப்பாச்சி பொம்மை முக்கிய இடம் வகிக்கிறது. இவை சந்தன மரம் அல்லது தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் உருவ பொம்மைகளாகும். ஒவ்வொரு வருடமும் இந்தப் பொம்மைகளை புதுத் துணிகளைக் கொண்டு மணமகன் - மணப்பெண் ஒப்பனையில் அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள். தென்னிந்திய திருமணச் சடங்கின் போது மரப்பாச்சி பொம்மைகளைத் தாய்வீட்டுச் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் தற்போதும் இருந்து வருகிறது. இப்பொம்மைகள் வழிவழியாக அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்m நவராத்திரி விழாவில், முதல் மூன்று நாட்கள் இந்து சமயத்தில், சக்தியின் அம்சங்களாக கருதப்படும் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரசுவதிக்கும் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன. பத்தாவது நாள் வெற்றியைக் குறிக்கும் நாளாக "விஜய தசமி" என்று கொண்டாடப்படுகிறது. அன்று "வித்யாரம்பம்" மற்றும் புதிய கலைகள் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற நாளாக இருப்பதால், மக்கள் புதிய செயல்களைச் செய்யத் தொடங்கும் வழக்கமுள்ளது.
நவராத்திரி விழா பெண்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விழாவாக இருக்கிறது. இந்தப் பத்து நாட்களும் மாலை வேளையில் பல நிறக்கோலலிட்டு, குத்து விளக்கேற்றி, சக்தி தேவியின் வழிபாட்டுப் பாடல்களை பாடி மகிழ்வர். கொலு வைத்துள்ள வீட்டிற்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தினமும் மாலை வேளையில் வருகை புரிந்து பக்திப் பாடல்களைப் பாடுவதும், புராணங்கள் வாசிப்பதும் நடைமுறையாக உள்ளது. பின்னர் கடவுளுக்குப் படைக்கப்பட்ட இனிப்பு மற்றும் பலகார வகைகளை வீட்டிற்கு வந்தவருக்கு கொடுத்து உபசரிப்பார்கள். முக்கியக் கோவிலான மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பிரகார மண்டபத்தில், ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நோன்பு நாளை முன்னிட்டு கொலு வைக்கின்றனர். கொலு வைக்கும் முறை அனைத்துக் கோவில்களிலும், குறிப்பாக, தமிழ்நாடு, கருநாடகம், புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பரவலாக உள்ளது.