நமது வலது கரம் உணவு உண்பது, எழுதுவது போன்ற நல்ல காரியங்களுக்குப் பயன்படுகிறது. நமது இடது கரமோ ஈனமான காரியங்களுக்குப் பயன்படுகிறது. ஆனால் ஆண்டவன் முன்னிலையில் உயர்வு - தாழ்வு இல்லை. எல்லோரும் சமம். அதை உணர்த்தவே, இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து ஆண்டவனைப் பார்த்துக் கும்பிடுகிறோம்.
கடவுள் எல்லாவற்றையும் தன்னிடம் விட்டுச் சரணடைந்திருப்பவர்களிடம் கருணை காட்டுகிறார். அவர்களுக்கு உதவ மனம் இளகி முன் வருகிறார். "இறைவா! என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை. எல்லாம் உன்னுடையவை. உன்னுடைய ஆளுகைக்கு என்னை விட்டுவிட்டேன்!'' என்று உடம்பைத் தரையோடு தரையாகக் கிடத்தி வணங்கி, எல்லாச் செயல்களும் ஒடுங்கி, பணிவின் அடையாளமாக நாம் இருக்கும் நிலையில் ஆண்டவன் நம்மை ஏற்றுக் கொண்டு அருள் புரிய முன்வருகிறான்.
காலை வெயிலில் உடம்பில் சூடு முழுவதுமாக உறைக்கும். நடுப்பகலிலோ தலையில் மட்டுமே வெயில்படும். அப்போது தலைக்கு மட்டும் மறைப்பு இருந்தால் போதும். பண்படாத மனதுக்குப் பலவிதத்திலும் பாதுகாப்பு தேவை. பண்பட்டு உயர்ந்த உள்ளத்துக்கு ஆண்டவன் அருள் மட்டும் இருந்தால் போதும். இப்படி மனதை உயர்த்திக் கொள்வதைக் காட்டும் அடையாளமாகவே இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் குவித்து ஆண்டவனை வணங்குகிறோம்.