'நாயிற் கடையேனை' என்று மணிவாசகப் பெருமான் சொல்வார்.
ஏன் தெரியுமா? நாய் ஏதேனும் உணவைச் சாப்பிடும், பிறகு கக்கும். பின்பு கக்கிய அந்த உணவையே திரும்பச் சாப்பிடும்.
நாமும் அப்படித்தான். தீய பழக்க வழக்கங்களையும், உலக ஆசாபாசங்களையும் விட்டுவிடுவதாகச் சொல்வோம், பிறகு கொள்வோம்.
குலப் பகையில் (எல்லோரும் அல்ல) பெரும்பாலான மக்களும் நாயும் ஒன்றே.
அடுத்த தெரு நாய், வேற்று நாய் தங்கள் பகுதிக்கு வந்துவிட்டால் போதும், அந்தத் தெருவின் நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்துக் குரைத்து, புதிய நாயை விரட்டி அடிக்க ஆரம்பிக்கும்.
அதே நாய்கள் பிடித்துச் செல்லப்படும் போது ஒரே தெரு, அடுத்த தெரு நாய் என்று வித்தியாசமில்லாமல் கூண்டு வண்டிக்குள் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கும்.
நாமும் நமது முடிவு நெருங்குகிறது, நமக்கு வயது முதிர்ச்சி வந்துவிட்டது என்ற நிலைக்கு ஆளாகும்போதுதான் இறைவனிடம் திரும்பி அமைதி காண முற்படுகிறோம்.
இப்படி ஐந்தறிவு நாய்களைப் போலவே நாமும் நடந்து கொள்வதால் ஆறறிவு படைத்த நாம் நாயினும் கடைப்பட்டவர் ஆகிறோம்.