மகாபாரதப் போரில் பதினான்காம் நாள் யுத்தத்தில் ஜயத்ரதனைக் கொல்ல அர்ஜுனன் முற்பட்ட போது ஜயத்ரதன் ஒளிந்து கொண்டான்.
அப்போது கண்ணன் தன் சங்கல்பத்தினால் சுதர்சனச் சக்கரத்தைப் பகலவனின் முன்புறம் நிறுத்தி உலகெங்கும் இருள் மூடச் செய்தான்.
கதிரவனைப் போல் பல்லாயிரம் மடங்கு பிரகாசமாக இருக்கும் சுதர்சன சக்கரம் பகலவனுக்கு முன் வரும் போது இன்னும் அதிகப் பிரகாசமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்? எப்படி இருள் மூடியது?
அதற்கு ஒரு முன் கதை இருக்கிறது.
அம்பரிஷி மன்னன் ஏகாதசி விரதம் இருந்தார். அன்றைய தினம் துர்வாசர் வருவதாக இருந்தார்.
அவர் வரத் தாமதமானதால் அம்பரிஷி நீர்வார்த்து விரதத்தை முடித்துவிட்டார்.
தாமதமாக வந்த துர்வாசர், அம்பரிஷி விரதம் முடித்த செய்தியைக் கேட்டு கோபம் கொண்டு அம்பரிஷிக்குச் சாபம் கொடுத்தார்.
அதற்குப் பதிலாக அம்பரிஷி, திருமாலை வேண்டி சுதர்சன சக்கரத்தைக் கொண்டு துர்வாச முனிவருக்குப் புத்தி புகட்ட விரும்பினார்.
சுதர்சன சக்கரம் தூர்வாசரை பதினான்கு லோகங்களுக்கும் ஓட ஓட விரட்டித் துரத்தியது.
இறுதியில் வைகுண்டம் வந்த துர்வாசர் திருமாலை வேண்ட, அவர் அம்பரிஷியையே சரணடையும்படி துர்வாசருக்கு யோசனை கூறினார்.
அப்படியே துர்வாசர் அம்பரிஷியை வேண்ட, சக்கரம் அவரைத் துரத்துவதை நிறுத்தியது.
அப்போது துர்வாசர் சக்கரத்திற்கு ஒரு சாபம் தந்தார்:
''என்னை ஈரேழு உலகங்களுக்கும் துரத்திய நீ ஒரு முறையாவது, ஒரு நாழிகை ஒளியிழந்து கிடப்பாய்!''
அந்தச் சாபத்தினால்தான் சுதர்சன சக்கரம் பாரதப் போரின்போது ஒளியிழந்து உலகெங்கும் இருள் மூடியது.