புனித நீராடும் விழா (புஷ்கரம்) என்பது இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற, ஆற்றை வணங்குகின்ற விழாவாகும். புஷ்கரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நீராடுதல் என்று பொருள். புஷ்கரணி என்றால் தீர்த்தக்கட்டம் ஆகும். அதாவது, அது குளியலுக்கான சாதாரண படித்துறை அல்ல. அதைவிடப் புனிதமான ஆன்மிகத் தீர்த்தமாடும் தலமாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம், தாமிரபரணி புஷ்கரம் என்று ஆகிய 12 பெரிய ஆறுகளில் புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
இவ்விழாவின் போது, மூத்தோர் வழிபாடு, ஆன்மீகச் சொற்பொழிவுகள், பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவை நடத்தப்படுகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஆற்றிலும் நடத்தப்பெறுகிறது. ஒவ்வொரு ஆறும் ஒவ்வொரு ராசியுடன் தொடர்புடையதாகும். குரு இருக்கும் இடத்தினைப் பொறுத்து, தொடர்புடைய ஆற்றில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அவை;
1. மேஷம் - கங்கை - கங்கா புஷ்கரம் - காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் என்று மூன்று இடங்களில் நடத்தப்படுகிறது.
2. ரிஷபம் - நர்மதை - நர்மதா புஷ்கரம் - மத்தியப் பிரதேசம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஓங்காரேஸ்வரர் தலம் எனுமிடத்தில் நடத்தப்படுகிறது.
3. மிதுனம் - சரஸ்வதி - சரஸ்வதி புஷ்கரம் - குருசேத்திரம், கேசவ பிரயாகை, சோம்நாதபுரம் (குஜராத்), திரிவேணி சங்கமம் (அலகாபாத்), காலேஸ்வரம் (ஆந்திரப்பிரதேசம்), பேடாகட் (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
4. கடகம் - யமுனை - யமுனா புஷ்கரம் - யமுனோத்ரி, ஹரித்வார், விருந்தாவன், மதுரா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
5. சிம்மம் - கோதாவரி - கோதாவரி புஷ்கரம் - திரியம்பகம் (நாசிக் மாவட்டம்), கோதாவரி நதி தீர்த்தக்கரை (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
6. கன்னி - கிருஷ்ணா - கிருஷ்ணா புஷ்கரம் - பஞ்ச கங்கா நதி (துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி ஆகிய ஐந்து நதிகள் சேர்ந்து), பிரயாக் சங்கமம் (கிருஷ்ணா நதியோடு சேருமிடம்), விஜயவாடா (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
7. துலாம் - காவிரி - காவிரி புஷ்கரம் - ஒக்கனேக்கல், மேட்டூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, நெரூர், வேலூர் (நாமக்கல்), திருச்சி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
8. விருச்சிகம் - தாமிரபரணி - பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம் - பீமாசங்கரம் (ஜோதிர்லிங்கத்தலம்), பண்டரிபுரம், பாண தீர்த்தம் (தாமிரபரணி நதிக்கரை), பாபநாசம், திருவிடைமருதூர், சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
9. தனுசு - பிரம்மபுத்ரா - பிரம்மபுத்ரா புஷ்கரம் - பிரம்மபுத்ரா நதிக்கரைகளில் (அஸ்ஸாம்) நடத்தப்படுகிறது.
10. மகரம் - துங்கபத்ரா - துங்கபத்திரா புஷ்கரம் - சிருங்கேரி, மந்த்ராலயம் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
11. கும்பம் - சிந்து - சிந்து புஷ்கரம் - சிந்து நதி பாயும் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
12. மீனம் - பிராணஹிதா (கோதாவரியின் உப நதி) - பிராணஹிதா புஷ்கரம் - காலேஸ்வரம் (அடிலாபாத், தெலுங்ங்கானா) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.