நம் புராணங்களில் இறைவனின் அருள் வேண்டி தவம் செய்த சிலர், தங்கள் உடல் உறுப்புகளை வெட்டி சமர்த்து, அதன் பின்பு இறைவனின் அருள் பெற்ற செய்திகளும் உண்டு. இதே போல் பக்தன் பக்தியின் மேலீட்டால் தன் முடியையும் இறைவனுக்கு வழங்குகிறான். இங்கு முடி என்பதை ஏதோ இழுக்கான சொல்லாக, பொருளாக நினைக்கக்கூடாது. இங்கு பக்தன் இறைவன் மீது கொண்ட பக்தியை மட்டுமே நாம் காணவேண்டும்.
இறைவனின் அருள் வேண்டியும், நேர்த்திக்கடன் என்னும் முறையிலும், தன் நோயை நீக்கிய, தன் உயிரைக் காத்த இறைவனின் அருளை எண்ணி தன் உயிரையே கொடுக்கும் முறையில் பக்தன் தன் உடம்பின் தலையாய (முக்கியமான) தலைமுடியை இறைவனுக்குச் சமர்ப்பிக்கிறான்.
இதில், இறைவனுக்கு அளிப்பதில் அழகை விட இறைவன் அருளே முக்கியம் என்ற தொன்ம நம்பிக்கை அடங்கியுள்ளது.
என் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பது பழமொழி. நம் தலைக்கு மேல் கம்பீரமாக விளங்குவது முடிதான். அழகைத் தருவதும் முடிதான். எவ்வளவுதான் அழகும், நிறமும் ஒருவனுக்கு இருந்தாலும், அவன் தலை முடியில்லாமல் மொட்டையாக வழுக்கைத் தலையாக இருந்தால் அது அழகாக இருக்காது.
முடிஎன்பதைச் சிறப்பிக்கும் வகையில் தான் அரசனின் கிரீடத்தை முடி என்று அழைத்து வந்தார்கள். அரசனுக்குரிய மரியாதை அந்த முடிக்கும் அவனது செங்கோலுக்கும் உண்டு என்பதை நம் இலக்கியங்கள் காட்டுகின்றன.
மலையின் மிக உயர்ந்த சிகரம் முடி எனப்படும். இதிலிருந்து சிறப்புக்குரியது முடி என்பது தெளிவாகும்.
மொட்டை அடித்தல் என்பது பக்தன் முழுமையாகத் தன்னை இறைவனிடம் கொடுத்தல் என்ற உட்பொருளை கொண்டிருக்கிறது. எனவேதான் தலைமுடி அனைத்தையும் இறைவனுக்குக் காணிக்கையாக்குவது முடி காணிக்கை எனப்படுகிறது.
இறைவனின் அருள் வேண்டியும், தனக்கோ அல்லது தனக்கு உற்றவருக்கோ நேர்ந்த துன்பத்திலிருந்து காக்கும்படி இறைவனை வேண்டி வழங்குவது நேர்த்திக்கடன் எனப்படும் முடி காணிக்கையாகும்.
இறைவனுக்கு முடியை வழங்குவதாக மனதால் எண்ணியதும் அது நேர்த்திக்கடன் ஆகிறது. கடன் என்பது உடனடியாகக் கொடுக்க வேண்டிய ஒன்று என்பதை நினைவூட்டுகிறது.
இறைவனுக்குத் தங்கள் முடியைக் காணிக்கையாகக் கொடுத்து, சிகையின் அழகைக் குறைத்து, அதன் மூலம் பக்தர்கள் நான் என்னும் அகந்தையைப் போக்கிக் கொள்கிறார்கள்; போக்கிக் கொள்ள வேண்டும்.
முடி களைந்தால் குளித்த பிறகுதான் வீட்டுக்குள் வர வேண்டும் என்று சொல்வார்கள்; தூய்மைக் குறைவு என்று சொல்வார்கள் ஆனால் இறைவனுக்குக் காணிக்கையாக இவ்வாறு முடி களைவது தூய்மைக் குறைவாகாது என்பார்கள்.
தங்களிடம் உள்ள தீயொழுக்கங்களை முழுமையாக நீக்குவதன் அடையாளமாகவே பக்தர்கள் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள் என்றும் ஒரு கருத்தும் உண்டு.
முருகப்பெருமான் மாங்கனிக்காகத் தாய் தந்தையரிடம் கோபம் கொண்டு பழநி மலையில் எழுந்தருளினார். அப்போது பெருமான் ஆண்டிக்கோலத்தில் கோவணம் தரித்து மொட்டைத் தலையுடன் காட்சி தந்தார். எனவே, அந்தப் பெருமானைப் பின்பற்றி அவரது அருளை வேண்டுபவர்கள் பழநியில் மொட்டை அடித்து முருகப் பெருமானின் திருவருளை வேண்டுகிறார்கள்.
வேணிதானம்
பெண்களுக்கு முடி குழல், தொங்கல், பனிச்சை, சுருள் (குழல், அளகம்,பனிச்சை, துஞ்சை) என்று நான்கு வகைப்படும். மயிரை உச்சியில் முடிவதால் முடி எனவும், சுருட்டி முடித்தலால் குழல் எனவும், மயிரை முடிந்து தொங்கவிடுவதால் தொங்கல் எனவும், பின்னிவிடுவதால் பனிச்சை எனவும், பின்னே செருகுவதால் சுருள் எனவும் கூறுவார்கள் என்று பிங்கல நிகண்டு தெரிவிக்கிறது.
பெண்களுக்கு அழகு சேர்க்கும் இந்தக் கூந்தலைப் பொதுவாகப் பெண்கள் கழிப்பதோ, மழிப்பதோ இல்லை. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் அலகாபாத் திருவேணி சங்கமத்தில் மட்டும் பெண்கள் கூந்தலைச் சிறிதளவு அளிப்பது சம்பிரதாயமாக இருந்து வருகிறது. இது வேணி தானம்எனப்படும். இங்கு போடும் கூந்தல் தண்ணீரில் மிதப்பதில்லை; நீரில் அமிழ்ந்துவிடும் என்கிறார்கள்.
இப்போது திருப்பதி, பழநி போன்ற சில தலங்களில் பெண்கள் தங்கள் கூந்தலை மழித்தும், சிறிதளவு கழித்தும் வருகிறார்கள்.