நடராஜரின் மேலே தூக்கிய வலது கரத்தில் உடுக்கை இருக்கிறது. இது பிறப்பின் ஒலியைக் காட்டுகிறது.
மேலே தூக்கிய இடது கையிலோ நெருப்பு இருக்கிறது. இது முடிவில் நேரும் அழிவை உணர்த்துகிறது. இவை இரண்டும் சம நிலையில் இருப்பது, இவை இரண்டையுமே நாம் சரிசமமான உணர்வுடன் பார்க்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.
நடராஜரின் இரண்டாவது வலது கை அபய ஹஸ்தத்தைக் காட்டுகிறது. அது நாம் இறைவனை நம்பினால் - பிறவியிலிருந்து அழிவு வரையில் நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை இறைவன் ஏற்றுக்கொண்டு நம்மைக் காப்பாற்றுவான் என்பதைக் காட்டுகிறது.
நடராஜரின் இரண்டாவது இடது கை பாதத்தைக் காட்டுகிறது. அந்தப் பாதம் மேலே தூக்கிய பாதம். இது இறைவனை வழிபட்டால் மாயையிலிருந்து விடுபட்டு மேலே எழ வாய்ப்பு உண்டாகும் என்பதைக் காட்டுகிறது.
நடராஜரின் வலது கால் கீழே அரக்கனின் உடலை மிதித்துக் கொண்டிருக்கிறது. இது தீ சக்திகளை நாம் அடக்கி வெல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஆனந்த நடனமிடும் நடராஜரின் உருவம் உலகத்தின் இயக்கம் அனைத்தையும் ஆட்டுவிக்கும் இறைவனின் வடிவம். இறைவன் ஆட, உலகமே அவன் ஆட்டுவித்தபடி ஆடுகிறது என்பதே அதன் அர்த்தம்.