தேவி வேத வடிவமானவள், மந்திர வடிவமானவள். தேவியின் வேத வடிவத்திற்கு ஆறு அங்க தேவதைகள் உள்ளனர்.
1. தேவியின் மூக்கு - சிக்ஷா என்ற அக்ஷர இலக்கண தேவதை.
2. வாய் - வியாகரணம் என்ற சொல் இலக்கண தேவதை.
3. செவிகள் - நிருக்தம் என்ற பொருள் இலக்கண தேவதை.
4. பாதங்கள் - சந்தஸ் என்ற யாப்பிலக்கண தேவதை.
5. கண்கள் - ஜ்யோதிஷம் என்ற கால இலக்கண தேவதை.
6. கரங்கள் - கல்பம் என்ற செயல் இலக்கண தேவதை.
தேவியின் மந்திர வடிவத்திற்கு ஆறு அங்க தேவதைகள் உள்ளனர்.
1. ஹ்ருதய தேவி (இதயம்)
2. சிரோ தேவி (தலை)
3. சிகா தேவி (தலைமுடி)
4. நேத்ர தேவி (கண்கள்)
5. கவச தேவி (கவசம்)
6. அஸ்திர தேவி (ஆயுதங்கள்) ஆகியோர்.
இவர்கள் ஒன்பதாவது ஆவரணத்தில் பிந்து மண்டலத்தில் லயாங்க பூஜையில் வழிபடப்படுகிறார்கள். இவர்களோடு சேர்ந்து பிந்து மண்டலத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள்.
தேவி ஆறு குணங்களும் முழுமையாக நிரம்பப் பெற்றவள். அவளுக்கு ‘ஷாட்குண்ய பரிபூரிதா’ என்ற பெயர் உண்டு.
தேவியிடம் பூர்ணமாக உள்ள குணங்கள்:
1. ஈஸ்வரத் தன்மை.
2. வீர்யம் - உலகைத் தாங்கும் தன்மை.
3. புகழ்.
4. செல்வம்.
5. ஞானம்.
6. வைராக்கியம்.
தேவியை உபாசனை செய்யும் வழிகளும் ஆறு. இவற்றை ‘ஷடத்வா’ என்பர். அவை:
1. வர்ண அத்த்வா - ‘அ’ முதல் ‘க்ஷ’ வரையுள்ள அக்ஷரங்களின் சக்தி பற்றி விளக்குவது.
2. பத அத்த்வா - அக்ஷரங்களைச் சேர்த்து பொருள் உள்ளதாக அமைத்தது பதம். அதன் சக்தியை விளக்குவது.
3. மந்த்ர அத்த்வா - பதங்களையோ அக்ஷரங்களையோ கொண்டு தனித்து அக்ஷரத்திற்கும் அதன் கூட்டான பதத்திற்கும் சக்தி கொண்டதாக அமைத்தது மந்திரம். அதன் சக்தியை விளக்குவது.
4. கலா அத்த்வா - நிவிருத்தி, பிரதிஷ்டா, வித்யா, சாந்தி, சாந்திய தீதா என்ற பஞ்சபூத பஞ்சபிரம்ம கலைகளைப் பற்றி விளக்குவது.
5. தத்வ அத்த்வா - சிவன் முதல் பூமி முடிய 36 தத்துவங்களுக்கான விளக்கம்.
6. புவனா அத்த்வா - ஆகாச புவனம், வாயு புவனம், அக்னி புவனம், ஜல புவனம், பூமி புவனம் என்ற ஐந்து புவனங்களைப் பற்றியது.
இந்த ஆறு வழிகளால் உணரப் பெறுவதே உலகம். இது பிரம்மாண்டத்திலும் பிண்டமாகிய தனிமனிதனின் சரீரத்திலும் உள்ளது.
இவ்வாறாக இறைத்தத்துவம் ஆறு ஆறாக நிறைந்து ஆறாகப் பெருகி ஓடுகிறது.