ருத்திராட்ச மணிகளை அணியத் தகுந்தவர்கள்:
தீய எண்ணங்களும் தீய செயல்களும் அறவே இல்லாத பழைய ஆசாரங்களுடன் பக்தியுடன் வாழ்கிறவர்களே ருத்திராட்ச மணிகளை அணிவதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர்கள்.
பாவிகளும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், போலிகளும் ருத்திராட்ச மணிகளை அணிவதால் பெறும் நற்பலன் ஒன்றும் இல்லை.
பக்குவப்பட்ட மனமும், பக்தி உணர்வும், தூய்மையான உடலும் இருந்தால், ஆண்களில் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும், வயது வரம்பில்லாமல் ருத்திராட்ச மணிகளை அணியலாம்.
பெண் துறவிகள் வயது வரம்பில்லாமல் ருத்திராட்ச மணிகளைப் புனையலாம்.
இல்லறத்தில் வாழ்ந்து துறவு மனப்பான்மையுடன் இருக்கும் பெண்கள், நாற்பத்தைந்து வயதுக்கு மேல் ருத்திராட்ச மணிகளை அணிவது மிகவும் நல்லது.
ருத்திராட்ச மணிகள் அலங்காரப் பொருள்கள் அல்ல. நாகரிகத் தோற்றத்திற்காக அணியத் தகுந்தன அல்ல. அவை முழுக்க முழுக்க ஆன்மிகத்துடன் தொடர்புடையவை.
அவற்றின் தெய்வாம்சங்களில் முழு நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே, அவற்றை அணிந்து பயன் பெற வேண்டும்.
உறுப்புகளும், ருத்திராட்ச மணி மாலைகளும்:
உச்சியிலிருந்து கொப்பூழ் வரை ருத்திராட்ச மணி மாலைகளை அணியலாம்.
மணிகளின் எண்ணிக்கை வரம்புகள் வருமாறு
1. உச்சி (குடுமி) – 1 மணி
2. தலை (நெற்றிக்கு மேல்) – 36
3. காதுகள் ஒவ்வொன்றின்றிலும் – 1 அல்லது 3 அல்லது 6 மணிகள்.
4. கழுத்து – 1 அல்லது 27 அல்லது 32 மணிகள். சிலர் 3 மணிகளை அணிகிறார்கள்.
5. மார்பு – தாழ்வடம். 54 அல்லது 108 மணிகள்.
6. மேல் – கைகள் ஒவ்வொன்றிலும் 16 மணிகள்
7. கை – மணிக்கட்டுகள் ஒவ்வொன்றிலும் 12 மணிகள்.
மேற்கண்ட ஏழு உறுப்புகளைத் தவிர வேறு உறுப்புகளில் ருத்திராட்ச மணிகளை அணிவது குற்றம்.
அணிவதற்குப் பொருத்தமான மணிகளைத் தேர்ந்ததெடுக்க வேண்டும்.
ருத்திராட்ச மணிகளை அணியும் முறைகள்:
முதலில் ஐந்தெழுத்தை உச்சரித்தபடியே திருநீற்றை நெற்றி முதலிய பதினாறு உறுப்புகளில் புனைய வேண்டும்.
அடுத்து, மீண்டும் சிவ மந்திரங்களைக் கூறியும் அல்லது ஐந்தெழுத்தை உச்சரித்தும் மேற்குறித்த ஏழு உறுப்புகளில் ருத்திராட்ச மணிகளைச் சூட வேண்டும்.
திருநீறும், ருத்திராட்ச மணிகளும் புனைந்த சிவனடியார்களின் தோற்றத்தில் மங்கலச் சிவப்பொலிவு தானே வரும்.
ருத்திராட்ச மணிகளை அணியத் தகுந்த காலங்கள்:
தவசிகள், முனிவர்கள், மடாதிபதிகள், சமயச் சான்றோர்கள், கோயில் பூஜைக் காரியங்களைச் செய்யும் குருக்கள், பட்டர்கள், சித்தர்கள், சிவ பக்தர்கள் முதலியவர்கள் ருத்திராட்ச மணிகளை அணியும் வழக்கமுடையவர்கள்.
அவற்றை இவர்கள் நிச்சயம் அணிய வேண்டிய காலங்கள் வருமாறு:
1. ருத்திராட்ச மணிகள் சிவனுடன் நெருங்கிய தொடர்புடையவை.
எனவே, சிவபூஜைக் காரியங்கள் செய்யும் எப்போதும், ருத்திராட்ச மணிகளை அணிந்திருக்க வேண்டும்.
2. சந்தியா வந்தனத்தின்போது
3. சிவ மந்திர ஜபத்தின்போது
4. சிவத் தியானத்தின்போது
5. சிவாலய தரிசனத்தின்போது
6. சிவ புராணத்தைப் படிக்கும்போது
7. பிறர் சிவபுராணம் படிக்கக் கேட்கும்போது
8. பன்னிரு திருமுறைப் பாராயணத்தின் போது
9. சைவ சமயச் சொற்பொழிவின்போது ருத்திராட்ச மணிகளை அணிந்திருப்பது மிக அவசியமாகும்.
ருத்திராட்ச மணிகளை அணியத் தகாத காலங்கள்:
1. உறங்கும்போது
2. மலசலம் கழிக்கும்போது
3. உடம்பு தூய்மையில்லாதபோது
4. நோயுற்று படுக்கையில் கிடக்கும் போது
5. சில காரணங்களால் வீட்டின் தூய்மை கெடும்போது
6. வீட்டில் அல்லது வீட்டருகில் பிறப்பு அல்லது இறப்பு காலங்களில் ஒருவர் ருத்திராட்ச மணிகளைத் தரிக்கக்கூடாது.
அவற்றைப் பூஜையறை முதலான தூய்மையான இடங்களில் பாதுகாப்பாக அதை வைத்திருக்க வேண்டும்.
ருத்திராட்சத்தை அணிவது முக்கியம். அதைப் தூய்மையுடன் பாதுகாப்பது அதைவிட முக்கியம் ஆகும்.