வாழ்வுக்கு வழிகாட்டும் சில தகவல்கள்

இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்கு சமயப் பெரியோர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் சில தகவல்கள்...
* வானவில்லை பிறருக்குக் காட்டக்கூடாது.
* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது. தலையிலுள்ள எண்ணெயை எடுத்து உடம்பில் தேய்க்கக் கூடாது.
* ஒரு காலினால் இன்னொரு காலைத் தேய்த்துக் கழுவக் கூடாது.
* தூங்குபவரைத் திடீரென்று தட்டி எழுப்பக் கூடாது. தூங்குபவரின் முகத்தைப் பார்க்கக் கூடாது.
* வெற்றிலையை மடித்துக் கணவனுக்கு மனைவி கொடுக்கலாம். மனைவிக்குக் கணவன் மடித்துக் கொடுக்கக் கூடாது. தாய்க்கு மகன் மடித்துத் தரக்கூடாது. தந்தைக்கு மகள் மடித்துத் தரக்கூடாது.
* இருட்டில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்துவிட்டால், சூரிய பகவானை மனதுக்குள் வணங்கிவிட்டு விளக்கைப் பொருத்தியபின் வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும்.
* நல்லவற்றை சிறியவர், பெரியவர் எனப் பாகுபாடு கருதாமல் எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்வது நல்லது.
* படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக் கூடாது.
* வாசலுக்கு நேராகப் படுக்கக் கூடாது.
* தூக்கக் கலக்கத்தில் சாமி கும்பிடக் கூடாது.
* சாப்பிடும் போது தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை எடுத்துக் குடிக்கக் கூடாது. சாப்பிடும் போது அடிக்கடி தண்ணீர் குடிக்கக் கூடாது.
* ஆலய நந்தவனங்களிலிருந்து சொந்த உபயோகத்திற்கென ஒரு பூவைக் கூட எடுத்துவரக் கூடாது.
* கோயிலுள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருபவர்கள் வேறு எங்கும் செல்லாமல் வீட்டிற்குள் வந்து காலடி வைத்துவிட்டு, சிறிது நேரம் கழித்துத் தான் எங்கும் செல்ல வேண்டும்.
* வீட்டிற்குள் பூஜை அறை தனியாக இருப்பது நல்லது. இடவசதி இல்லாதவர்கள் சாமி படங்களுக்கு ஏதாவது திரை போட்டு மூடி வைப்பது நல்லது.
* நம்பிக்கை இல்லாதவனிடம் விபூதி தரக்கூடாது.
* விபூதியைப் பிறருக்குக் கொடுக்கும் போது, கட்டைவிரல், மோதிர விரல் சேர்த்து எடுத்து ஆண்டவனின் நாமம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
* சூரியன் உதயமாவதற்கு முன் அதிகாலை நேரத்தில் பொங்கல் வைத்தால் அதற்கு நல்ல நேரம், கெட்ட நேரம் என ஆராய்ந்து பார்க்க வேண்டியது இல்லை.
* தேர்வு எழுதச் செல்லும் போதும், வெளியூர் செல்லும் போதும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் போதும் தலை முழுகக் கூடாது.
* ஆன்மீகத்தைப் பொருத்தவரை கதைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் அதன் கருத்தை மட்டுமே கவனிப்பது பலன் தரும்.
* கருநிறம், செந்நிறம், புகைநிறம், பொன்னிறம் கொண்ட திருநீற்றை அணியக்கூடாது.
* கருவறையில் திரைச்சீலை தொங்கும்போது வணங்குதல் கூடாது.
* கோயிலுக்குச் செல்லும்போது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செல்வதுதான் நல்ல பலனைத் தரும்.
* செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் புத்தாடை அணியக்கூடாது.
* அமாவாசை நாளில் தலை முழுகக் கூடாது. முடி வெட்டிக்கொள்ளக் கூடாது. உடல் உறவு கூடாது.
* பொதுவாக விக்ரகங்களை வீட்டில் வைத்து வணங்குதல் கூடாது. அப்படி வீட்டில் வைத்து வணங்கினால், வேளை தவறாமல் நைவேத்தியம் செய்து முறைப்படி பூசைகள் செய்துவர வேண்டும்.
* பாம்பு புற்றுக்குப் பால் வார்க்கும் போது தேங்காய் மூடியிலோ, சருகு தொன்னையிலோ தான் பாலிட வேண்டும்.
* சந்திவேளையில் உடலுறவு கொண்டால் பிறக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் துர்க்குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
* சந்தி வேளையில் எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது. இந்த நேரத்தில் குளிப்பது, முகம் அலம்பிக் கொண்டு அலங்காரம் செய்து கொள்வது தலைவாரிக் கொள்வது கூடாது. மீறிச் செய்யும் பெண்ணின் குணங்கள் மாறிவிடும்.
* வீட்டுத் தோட்டத்தில் ஒரே இடத்தில் கரும்பும், வாழையும் சேர்ந்து இருக்கக் கூடாது.
* இறந்தவர் படங்களை வீட்டில் தெற்குப் பக்கம் பார்க்கும்படி மாட்டி வைக்கக் கூடாது.
* அம்மிக்குழவியை வீட்டின் வடகிழக்குப் பகுதியில் வைத்தால் வளம் பெருகும்.
-வயல்பட்டி கண்ணன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.