அன்னை பராசக்திக்கு நான்கு நவராத்திரிகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அவை:
1. சாரதா நவராத்திரி
2. லலிதா நவராத்திரி
3. சியாமளா நவராத்திரி
4. வாராஹி நவராத்திரி
1. சாரதா நவராத்திரி
மஹிஷாசுரனுக்கு வரம் கொடுத்த பிரம்மா, விஷ்ணு, சிவ மூர்த்திகளின் சக்தியே, தேவியாக துர்க்கையாகத் தோன்றி அவனை வதைத்தாள்.
10 ஆவது நாள் விஜயதசமி. மஹிஷாசுரனை வதைத்த நாள். புரட்டாசியில் வரும் இதுவே சாரதா நவராத்திரி அல்லது துர்க்கா நவராத்திரி ஆகும்.
நவராத்திரியில் அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுவது வழக்கம்.
2. லலிதா நவராத்திரி
வடநாட்டில் தேவி உபாசகர்களும் கோயில்களிலும் ராமநவமியை ஒட்டி வரும் நவராத்திரியை லலிதா நவராத்திரி என பூஜை, ஹோமங்களுடன் கொண்டாடுவர். இது சைத்ர நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.
3. வாராஹி நவராத்திரி
ஆடி மாத நவராத்திரியை வாராஹி நவராத்திரி என்பர். ஸப்த கன்னிகைகளுள் ஒருவரான வாராஹியை ‘வாராஹிவீர்ய நந்தன’ என்பர். வீரத்திற்கு வாராஹி உபாசனை தேவை. விளையாட்டு வீரர்களும் போர் வீரர்களும் வாராஹியை வழிபட வேண்டும்.
வாராஹி, ராஜராஜேஸ்வரி தேவிக்கு சேனாதிபதி - வாக்வாதினி என்றும் சொல்வர்.
வாராஹி தேவியானவள் லலிதா மஹாதிரிபுரசுந்தரியின் தளபதி. சியாமளா தேவியின் மந்திரி ஆவார். ராஜபரிபாலனம் செய்ய சேனாதிபதியும் மந்திரியும் முக்கியம் அல்லவா?
காஞ்சி காமாட்சி கோயிலில் கோஷ்டதேவியாக வாராஹி என்ற பெயரில் தேவி வீற்றிருக்கிறாள். தஞ்சை பிரகதீஸ்வரர், காசி ஹனுமன்காட் இங்கெல்லாம் வாராஹி உண்டு. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை வாராஹிதேவி என்பர்.
வாராஹி உபாசகனிடம் வாதாடாதே என்பர். ஏனெனில் அவனுக்குக் கோபம், வீரம் அதிகம் உண்டு. அவனை வெல்ல முடியாது.
4. சியாமளா நவராத்திரி
மாசி மாதத்து நவராத்திரியை ‘சியாமளா நவராத்திரி’ என்பர். சியாமளாதேவியை சியாமளா தண்டகத்தில்,
“மாதா மரகதஸ்யாமா மாதங்கி மதசாலினி
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீம் கதம்பவன வாஸினீம் |
ஜயமாதங்க தனயே ஜயநீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜயலீலா சுகப்ரியே ||”
என்று கவி காளிதாசர் துதிக்கிறார்.
கலை, கல்வி, சங்கீதத்தில் மேன்மையுற வழிபட வேண்டிய உன்னத தேவி சியாமளாதான்.
லலிதாதேவியின் கையிலிலுள்ள கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. சியாமளா தேவி பற்றி லலிதா ஸஹஸ்ரநாமம் இவ்வாறு கூறும்.
“69 - கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா”
“75-மந்த்ரிணி அம்பா விரசித விஷங்க வத தோஷிதா”
விஷங்கன் என்ற அசுரன் பண்டாசுரனுக்குச் சகோதரன். சியாமளாதேவி, ‘கேய சக்கரம்’ என்ற ரதத்தில் சென்று அவனை வதைத்தாள்.
ஸ்ரீவித்யா உபாசனையில், முதலில் பாலா மந்திரம், அடுத்து சியாமளா மந்திரம் உபதேசிப்பர். அதன் பின் பஞ்சதசி, ஷோடசி மந்திரங்கள் உபதேசிக்கப்படும்.
பிரம்மாவின் மானசபுத்திரரான மதங்க முனிவரின் மகள் சியாமளா. ஆதலால், அவள் பெயர் மாதங்கி. அவளே ராஜமாதங்கி. காஞ்சி காமாட்சி கோயிலில் எட்டு கைகளுடன் வீணை, கிளி ஏந்திய சியாமளாவைத் தரிசிக்கலாம்.
மாதங்கியின் எட்டுக் கைகளிலும் உள்ள சம்பாகதிர் - உலக இன்பங்கள்; தாமரை - கலையுள்ளம்; பாசம் - ஆகர்ஷண ஸித்தி; அங்குசம் - அடக்கியாளும் சக்தி; காரிகை - உலக ஞானம்; கிளி - ஆத்ம ஞானம்; கரங்களில் வீணை - பர அபர ஞானத்தையும் அருள்கின்றன.
அம்பிகையின் மந்திரியானதால் மந்த்ரிணீ என்று அழைப்பர். நிர்மலமான சித்தத்தை மந்திரம் என்றும், அதை உடையவர்கள் மந்திரி என்றும் அழைக்கப்படுவர். ராஜ்யத்தை நிர்வகிக்க புத்தி சாதுர்யம் தேவை. அதனால்தான் மந்திர ஆலோசனை என்று வந்தது.
ஆக, சியாமளா தேவியை வணங்குபவர்களுக்குக் கல்வி, கேள்விகளில் சிறப்பு, சங்கீதம், வாக்கு வன்மை, ஞானம், சௌக்கியங்கள், குபேர சம்பத்துக்கள் யாவும் உண்டாகும். மாணவர்களுக்கு சியாமளா வழிபாடு உன்னதப் பலனை அளிக்கும்.