தமிழ்நாட்டில் உள்ள சைவ சமய மடாதிபதிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள துறவிகளை, ‘தம்பிரான்’ என்று அழைப்பர். இத்தம்பிரான்களில் மூத்தவர் அடுத்த மடாதிபதியாக பதவியேற்பார். தம்பிரான்கள் சைவ சமய இலக்கியங்கள் சைவ ஆகமங்களில் நன்கு புலமைப் பெற்றவர்கள். இத்தம்பிரான்கள் அவர்கள் செய்யும் பணிக்குத் தக்க பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அவை;
1. ஒடுக்கத் தம்பிரான் - சைவ மடாதிபதிக்கு அருகில் இருந்து காரியம் பார்க்கும் தம்பிரான்
2. கட்டளைத் தம்பிரான் - சைவ மடத்தைச் சார்ந்த கோயில்களை மேற்பார்வையிட மடாதிபதியால் நியமிக்கப்பட்ட சைவத்துறவி
3. கார்வாரித் தம்பிரான் - சைவ மடத்தின் காரியங்களில் விசாரணை செய்யும் தம்பிரான்
அகராதிகளில் தம்பிரான் எனும் சொல்லிற்கு கடவுள், தலைவர், துறவிகட்குத் தலைவர், மன்னர் (திருவிதாங்கோட்டு அரசர்க்கு வழங்கும் பட்டம்) போன்ற பொருட்கள் உள்ளன.
சுந்தரமூர்த்தி நாயனரை சிவபெருமானின் தோழர் என்பதைக் குறிக்க தம்பிரான் தோழர் என பெரியபுராணம் குறித்துள்ளது.
தேனி மாவட்டத்தின் கம்பம் பிரதேசத்தில் வாழும் காப்பிலியர்களின் மாட்டுத் தொகுதிகளில் தலைமை மாட்டை தம்பிரான் மாடு என்றழைக்கின்றனர்.
இறைவன் அருளால் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதைக் குறிப்பதற்கு, ‘எனது தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்’ எனும் பழமொழி உள்ளது.