சக்ரவர்த்தி என்ற வைணவப் பெரியார் காஞ்சியைச் சேர்ந்தவர். ஒருமுறை அங்கே நதியில் மிதந்து வந்த ஒரு சவம் கரையில் ஒதுங்கியது.
அச்சவத்தின் தோள்களில் சங்கு சக்கரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனால், இறந்தவர் ஒரு வைணவர் என்று புரிந்து கொண்டார் சக்ரவர்த்தி.
பஞ்ச சம்ஸ்காரம் என்பது வைணவப் புனிதச் சடங்கு. இதை ஒரு குருவிடம் செய்து கொள்ள வேண்டும். இது பின்வரும் ஐந்து பாகங்களைக் கொண்டது.
1. திருமாலின் சங்கையும் சக்கரத்தையும், சீடனின் இரு தோள்களிலும் குரு பொறிப்பது.
2. வைணவர்களின் மதச் சின்னமான திருமண், திருச்சூர்ணம் இவற்றை குரு சீடனுக்கு அணிவிப்பது.
3. திருமாலின் அல்லது ஆழ்வார்களின் பெயர்களைச் சீடனுக்கு வைப்பது.
4. ரகசிய மந்திரங்களைச் சீடனுக்கு உபதேசம் செய்வது.
5. பெருமாளைப் பூஜை செய்யும் முறையை உபதேசிப்பது.
சிறிது காலம் பொறுத்திருந்து பார்த்தார் சக்ரவர்த்தி.
இறந்தவனைச் சொந்தம் கொண்டாடி ஒருவரும் வரவில்லை. அனாதைப் பிணத்தை எத்தனைக் காலம்தான் அப்படியே வைத்திருக்க முடியும்? ஒரு வைணவரின் பிணத்தை விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை சக்ரவர்த்திக்கு.
'ஆபத்துக்கு தோஷம் இல்லை' என்பது பழமொழி. அதனால் அந்த வைணவப் பிணத்துக்கு சக்ரவர்த்தியே ஈமச்சடங்குகளைச் செய்தார். யார் என்று தெரியாமல் ஈமச் சடங்குகளைச் செய்ததால், அவரை ஊர் மக்கள் விலக்கி வைத்தனர்.
அனாதைப் பிணத்துக்கு இரங்கி, தான் செய்த நல்ல காரியத்துக்காகத் தன்னை ஊரார் ஒதுக்கிவிட்டனரே என்று துயரத்தில் ஆழ்ந்தார் சக்ரவர்த்தி.
அப்போது காஞ்சி வரதராஜபெருமாள் அர்ச்சகர் மூலமாக, ''அவன் (சக்ரவர்த்தி) ஊருக்குப் பொல்லான். ஆனால் எனக்கு நல்லான்'' என்று அருளினார்.
பெருமாளுடைய அருள் வார்த்தையைக் கேட்டு, அதிசயப்பட்டனர் மக்கள். சக்ரவர்த்தியை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.
அது முதல், அவருக்கு நல்லான் சக்ரவர்த்தி என்றே பெயர் ஏற்பட்டது.