செருக்கோடு கயிலையைத் தூக்கி, அதன்கீழ் நசுங்குண்ட இராவணன், அதிலிருந்து மீள்வதற்காக சிவபெருமானை நினைத்து துதியைப் பாடி ஈசனைக் குளிர்வித்தான். இத்துதியைப் பாடிய பின்னர்தான், "சந்திரகாசம்" எனும் புகழ் பெற்ற வாளை, சிவன் இராவணனுக்கு வழங்கினார். இராவணனால் இயற்றப்பட்ட இத்துதி 'சிவ தாண்டவ தோத்திரம்' என்றழைக்கப்படுகிறது.
இத்துதியானது, சிவபெருமானின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடும் சங்கத மொழிப் பாடலாக விளங்குகின்றது. தாளம் போட வைக்கும் நடையும், எதுகை மோனையும் இப்பாடலின் சிறப்பம்சமாக உள்ள அதே வேளை, அதில் மயங்கி ஈசனே நடனமாடுவார் என்ற பொருளில் இத்துதிக்கு "சிவ தாண்டவ தோத்திரம்" எனும் பெயர் காரணப் பெயராக அமைந்தது.
சங்கத இலக்கியத்தின்படி, "பஞ்சசாமர சண்டம்" எனும் பதினாறு வரிகள் கொண்ட பாடலாக இது அமைந்துள்ளது. சிவ தாண்டவ தோத்திரத்தின் இறுதிச் சுலோகத்தில் வருகின்ற "எப்போது நான் மகிழ்வோடு இருப்பேன்?" என்ற ஏக்கம் மிகுந்த வினா, இந்நாளைய பக்தர்களுக்கும் பொருந்துவதாக இருக்கும்.
“மக்களையும் மன்னனையும் நான் ஒன்றாகப் பார்ப்பதெப்போ?
புல்லொத்த விழிகளையும் தாமரைக் கண்ணையும் நான் ஒன்றாகக் காண்பதெப்போ?
நண்பரையும் எதிரிய்யையும் நான் ன்றாக எண்ணுவதெப்போ?
மணியையும் மண்ணையும் ஒன்றெனச் சொல்வதெப்போ?
மாலையையம் பாம்பையும் ஒன்றெனச் சூடுவதெப்போ?
சொல்க என் இறைவா!
கங்கைக் கரைக் குகையில் நான் வாழ்வதெப்போ?
என்னேரமும் சிரமேல் கைதூக்கி, என் கொடுங்குணங்கள் கரைந்தோடுமாறு
உன் நாமங்களைச் சொல்லி நான் மகிழ்ச்சியாக இருப்பதேப்போ?
அதிரும் நுதல்விழி கொண்டவனே, சொல்க”
என்பதுதான் அந்த இறுதிச் சுலோகம்.